திருப்பூர்: ஆங்கில புத்தாண்டு இன்றிரவு கொண்டாட உள்ள நிலையில், மாவட்டம் முழுதும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். விதிமீறும் வாகன ஓட்டிகள் மீதும் கடும் நடவடிக்கை என, மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர். ஆங்கிலப் புத்தாண்டு (2026) இன்று நள்ளிரவு பிறக்க உள்ள நிலையில், புத்தாண்டை வரவேற்க மாநகரம், புறநகர் என, மாவட்டம் முழுதும் இளைஞர் பட்டாளங்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக, கேக் தயாரிக்கும் இடம், பேக்கரி போன்ற பகுதிகளில் 'கேக்'களை ஆர்டர் கொடுத்துள்ளனர். இவ்வாண்டு புத்தாண்டை விபத்தில்லா ஆண்டாக வரவேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாவட்டம் முழுதும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். இதற்காக, பிரதான ரோடு, முக்கிய சந்திப்புகளில் இன்று மாலை முதலே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட உள்ளனர். இதுதவிர்த்து, தற்காலிக 'செக்போஸ்ட்' அமைப்பு, விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து கடும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதுதவிர, 'சர்ச்' உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும் என்பதால், ஏராளமான மக்கள் வருவார்கள். இதன் காரணமாக, 'பீட்' மற்றும் ரோந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாட போலீசார் தெரிவித்துள்ளனர். கடும் நடவடிக்கை இதுகுறித்து போலீசார் கூறியதாவது: புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட கூடாது. பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படும் வகையில் அல்லது சட்டம் - ஒழுங்கினை பாதிக்கும் வகையில், மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்க கூடாது. பறிமுதல் செய்யப்படுவதோடு, சட்டப்பூர்வ கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். குடியிருப்பு சங்கங்கள், சமூகம் சார்ந்த அமைப்புகள் நடத்தும் விழாக்களும் முன்கூட்டியே அனுமதி பெற்று, நேரம், ஒலி, பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும். எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து, புத்தாண்டை கொண்டாட வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் குறித்து தெரிந்தால், பொதுமக்கள் தகவல் தெரியப்படுத்தலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.