| ADDED : டிச 29, 2025 05:24 AM
திருப்பூர்: திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான முன்னேற்பாடுகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில், குழந்தைகளுக்கு பாலுாட்ட வசதியாக, பாலுாட்டும் அறைகள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவில்களில், பிரத்யேக அறை அமைக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் ஏற்கனவே உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழா நெருங்குவதால், பெண் பக்தர்கள் வசதிக்காக, குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறை, வீரராகவப்பெருமாள் கோவிலில் திறக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவில் நாளை காலை 5:30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பரமபத வாசல் முன் பச்சைப்பந்தல் அமைத்து, அலங்கரிக்கும் பணி துவங்கியுள்ளது. கதவுகளுக்கு வார்னிஷ் அடித்து தயார்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாள் முழுவதும் தரிசனம் செய்வர் என்பதால், இரும்பு தடுப்பு வேலி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவில்வழி வரதராஜப்பெருமாள்; அவிநாசி வரதராஜப்பெருமாள்; திருமுருகன்பூண்டி கரிவரதராஜப்பெருமாள், கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது.