மாவட்ட சித்தா மருத்துவமனையை இடம் மாற்ற எதிர்ப்பு! கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டுகோள்
திருப்பூர்: மாவட்ட சித்தா மருத்துவமனையை இடம் மாற்றம் செய்யக்கூடாது என சித்த மருத்துவர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அலுவலகம், மாவட்ட சித்த மருத்துவமனை, ஓமியோபதி, ஆயுர்வேதம் இணைந்த ஒருங்கிணைந்த மருத்துவமனை செயல்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் எதிரே, புதிய மாநகராட்சி அலுவலகம் கட்ட திட்டமிட்டுள்ள, மாநகராட்சி நிர்வாகம், பார்க்கிங் வசதியை விரிவுபடுத்துவதற்காக, மாவட்ட சித்த மருத்துவமனையை உடனடியாக காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அமித், மாவட்ட சித்தா மருத்துவ அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சித்த மருத்துவர்கள் அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோரை சந்தித்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சித்த மருத்துவமனையை இடமாற்ற வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளனர். மூலிகைகளைபாதுகாக்க வேண்டும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் கூறியதாவது: சித்த மருத்துவமனை அருகேயே, 2010ல் மூலிகை வனம் உருவாக்கப்பட்டது. இங்கு ஆடாதோடை, நித்யகல்யாணி, கரிசலங்கண்ணி, ஆவாரம்பூ, மருதோன்றி, அரநெல்லி, இலுப்பை, அத்தி, கற்றாழை, ரணகல்லி, தான்றிக்காய் உள்ளிட்ட, 25 வகையாக மருத்துவ குணம் நிறைந்த மூலிகை செடிகள் வளர்க்கப்படுகிறது. மரங்களும் உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மலை, நிலவேம்பு சாறு தயாரிக்க மூலிகை வனம் அதிலுள்ள இலை, தழைகள் மிகுந்த பயன் தந்தது. சித்த மருத்துவமனை வேறு இடத்துக்கு மாற்றி நிர்வாக பணிகளுக்கு ஏற்பாடு செய்தாலும், கட்டடங்கள் உருவாகும் போது, இங்குள்ள மூலிகை வனம் நாசமாகிவிடும். பல நோய்களுக்கு மருந்தாக பயன்பட உருவாக்கப்பட்ட இந்த இடத்தை, இங்குள்ள அரிய மூலிகை செடிகளை நாசம் செய்து விடக் கூடாது. மாவட்ட சித்த மருத்துவமனை இடமாற்ற விஷயத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.