நகர குடியிருப்புகளில் பராமரிப்பு இல்லாமல் மாயமாகும் பூங்கா! ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை தேவை
உடுமலை; உடுமலை நகர குடியிருப்புகளில், பராமரிப்பில்லாத பூங்காக்கள் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு, மாயமாகி வருகிறது; நகராட்சி நிர்வாகத்தினர் சிறப்பு திட்டத்தின் கீழ், பூங்காக்களை பராமரித்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது. உடுமலை நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், புதிதாக லே -அவுட்கள் அமைத்த போது, பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படாமல், ஆக்கிரமிக்கப்பட்டு வந்தது. கடந்த, 2017ல், அனைத்து வார்டுகளிலும், பூங்கா உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு, நகராட்சி நிர்வாகத்தால் அவ்விடங்களை பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கம்பி வேலி அமைத்து, பூங்கா மற்றும் 'ரிசர்வ் சைட்' குறித்த விபரங்களை உள்ளடக்கிய தகவல் பலகை வைக்கப்பட்டது. பொதுமக்கள் தொடர் கோரிக்கை அடிப்படையில், உள்ளூர் திட்ட குழும நிதி வாயிலாக, தலா, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய பூங்காக்கள், கடந்த 2018 ல், அமைக்கப்பட்டது. வேலன் நகர், சிங்கப்பூர் நகர், அண்ணா குடியிருப்பு, வாசவி நகர் விரிவு, ருத்ரவேணி லே - அவுட், சந்தோஷ்நகர், சந்த்ரோதயா கார்டன், ஸ்டேட் பாங்க் காலனி, வாசவி நகர், எம்.பி., நகர், அனுஷம் நகர், டி.ஆர்.என்., கார்டன், ஆர்.கே., லே- அவுட் என, 13 இடங்களில் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டது. சில பூங்காக்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் வாயிலாக பராமரிக்கப்படுகிறது. மற்ற பூங்காக்களின் நிலை படுமோசமாக உள்ளது. உதாரணமாக சிங்கப்பூர் நகரிலுள்ள பூங்கா காணாமல் போகும் நிலையில் உள்ளது. அங்கிருந்த விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும், சேதப்படுத்தப்பட்டு, குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில், 'குடி'மகன்கள் தஞ்சமடையும் பகுதியாக பூங்கா மாறி விட்டது. அருகிலேயே அரசுப்பள்ளியும் அமைந்திருந்தும் பூங்காவை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த, 2018க்கு முன்பு அமைக்கப்பட்ட பல பூங்காக்களும் பரிதாப நிலையில் உள்ளது. மக்கள் பயன்படுத்த முடியாத பூங்கா இடங்கள், படிப்படியாக ஆக்கிரமிக்கப்படுகிறது. சுற்றுச்சுவர், கம்பி வேலி மாயமாகி விடுகிறது. இதனால், மக்கள், பொழுதுபோக்கவும், நடைபயிற்சி செல்லவும், பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. நகர மக்களுக்கு ஒரே ஆறுதலாக. ராஜேந்திரா ரோட்டிலுள்ள அண்ணா பூங்கா மட்டும் பயன்பாட்டில் உள்ளது. நகராட்சி கவனிக்குமா? உடுமலை நகரிலுள்ள அனைத்து குடியிருப்புகளிலும், பூங்கா இடங்களை மீட்டு நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. குடியிருப்புகளும், மக்கள் தொகையும் பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், சிறப்பு நிதி திட்டங்களின் கீழ், பூங்கா ஏற்படுத்தி, அவற்றை பராமரிக்கவும், தன்னார்வலர்கள் குழுக்களை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.