பகுதிநேர வேலை மோசடி; 2 பேர் கைது
திருப்பூர்; 'டெலிகிராம்' செயலி வாயிலாக, குறுஞ்செய்தி அனுப்பி, பகுதி நேர வேலை கொடுப்பதாக கூறி, முதலீடு செய்ய வைத்து மோசடி அதிகரித்துள்ளது.கடந்த ஆக., மாதம், ஓட்டல்களை தரமதிப்பு செய்யும் அமைப்பின் அலுவலர் என்று அறிமுகமான நபர், பகுதி நேர வேலை தருவதாக தெரிவித்துள்ளார்.ஓட்டல்களுக்கு மதிப்பெண் கொடுக்கும் பணியை செய்தால், வங்கி கணக்கில் தினமும் கமிஷன் வரவு வைக்கப்படுமென, திருப்பூரை சேர்ந்த நபர்களுக்கு ஆசை காண்பித்துள்ளார். நம்பிக்கை கொள்வதற்காக, மதிப்பீடு செய்த கமிஷனாக, ஒருவரது வங்கி கணக்கில், 959 ரூபாய் வரவு வைத்துள்ளார்.முதலீடு செய்தால் கூடுதல் கமிஷன் கிடைக்கும் என்று கூறியதால், புகார்தாரர், 8,000 ரூபாய் முதலீடு செய்தார். அதற்கு கமிஷனாக, 15 ஆயிரத்து, 917 ரூபாய் வழங்கியுள்ளனர். பிறகு, 90 ஓட்டல்களை மதிப்பீட்டு தரும் பணியைவழங்கியுள்ளனர்.புகார்தாரரிடம் இருந்து, வங்கி கணக்குகள் மூலம், ஏழு லட்சத்து, 31 ஆயிரத்து 166 ரூபாய் பெற்றுக்கொண்டார். பணி முடிந்ததும், 10 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இருப்பினும், புகார்தாரரால், பணத்தை எடுக்க இயலவில்லை.மொத்த முதலீட்டை திருப்பி கொடுப்பதாகவும், கூடுதலாக, 5.45 லட்சம் ரூபாய் முதலீடு செய்யுமாறும் கூறியுள்ளார். சந்தேகம் எழுந்ததால், பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.நிதி பரிவர்த்தனையை ஆராய்ந்து பார்த்த போது, தர்மபுரியில் உள்ள, ஐந்து வங்கி கணக்குகளுக்கு, இரண்டு லட்சத்து, 65 ஆயிரத்து, 298 ரூபாய் சென்றுள்ளதும், தர்மபுரியை சேர்ந்த செல்வக்குமார் என்பவர், தனது நண்பர்கள் வங்கி கணக்குகளை, மோசடி பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தியதையும் கண்டுபிடித்தனர்.திருவாரூரை சேர்ந்த கவுதம்குமார் என்பவரும், கமிஷன் அடிப்படையில் உடந்தையாக இருந்துள்ளார். கவுதம்குமார், மோசடி பணத்தை தனி செயலி வாயிலாக, அமெரிக்க டாலராக மாற்றி, கமிஷன் பெற்று, மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார்.சைபர் கிரைம் போலீசார், செல்வக்குமார், கவுதம் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து, நேற்று மாவட்ட சிறையில் அடைத்தனர்.பேராசை பெருநஷ்டம்சைபர் கிரைம் மோசடியில் பாதிக்கப்பட்ட நபர்களாக இருந்தால், சைபர் கிரைம் போலீசாரின் 1930 என்ற கட்டணமில்லா எண் அல்லது www.cybercrime.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக புகார் செய்யலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.'சைபர் கிரைம்' போலீசாரின் அறிவுரைகள்:l சமூக வலைதளங்களில், பகுதிநேர வேலை என்ற பெயரில் வரும் விளம்பரங்களை நம்பி, அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.l அதிக லாபம் வரும் என்று யாராவது கூறினால், அதன்மூலம் மோசடி நடக்க வாய்ப்புள்ளது; பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.l தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகம் இல்லாத நபர்களிடம் தொலைபேசியில் தெரிவிக்க வேண்டாம்.l உங்கள் வங்கி மற்றும் கடன் பெற்ற கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்க வேண்டும்.l மோசடிக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், தங்கள் வங்கி கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது.l இத்தகைய செயல்களில் ஈடுபடுவது குறித்து தெரியவந்தால், அவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கப்படும்.