நகராட்சியை கண்டித்து மக்கள் மறியல்: முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை
உடுமலை: உடுமலை, தாராபுரம் ரோட்டில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை நகராட்சி, 4வது வார்டு யு.எஸ்.எஸ்., காலனியில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு, அத்தியாவசிய தேவைகளுக்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், போர்வெல் அமைத்து, மின் மோட்டார் வாயிலாக நீர் எடுத்து, குடிநீர் தொட்டி அமைத்து வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதமாக மின் மோட்டார் பழுதடைந்த நிலையில், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பழுதடைந்த மின் மோட்டாரை பராமரித்து தர வேண்டும், என நகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் கண்டு கொள்ளவில்லை. இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள், நேற்று மாலை, காலி குடங்களுடன் உடுமலை- தாராபுரம் ரோட்டில், மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள், மின் மோட்டார் பழுது நீக்கி, குடிநீர் வினியோகம் சீரமைக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், இந்த ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.