நகரில் நெரிசலை தவிர்க்க திட்டங்கள் தேவை! நாள்தோறும் பாதிப்பால் மக்கள் வேதனை
உடுமலை; நகரில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலால், பிரதான ரோடுகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து அனைத்து தரப்பினரும் பாதித்து வருகின்றனர்; திட்டமிடப்பட்ட திட்டங்கள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது. திண்டுக்கல் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரம் அமைந்துள்ளது. மக்கள் தொகையும், வாகன போக்குவரத்தும் பல மடங்கு அதிகரித்தும், நகருக்கு தேவையான போக்குவரத்து கட்டமைப்புகள் நீண்ட காலமாக மேம்படுத்தப்படாமல் உள்ளன. பஸ் ஸ்டாண்ட் பரிதவிப்பு பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ள 5 நுழைவாயில்கள் வாயிலாக மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கின்றனர். மக்கள் ஒரே இடத்தில் நெடுஞ்சாலையை கடக்க அமைக்கப்பட்ட நடைபாதையும், நடை மேம்பாலமும் பயன்பாடு இல்லாமல் உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. நடை மேம்பாலத்தை மாற்றியமைத்து, மக்கள் பாதுகாப்பாக தேசிய நெடுஞ்சாலையை கடக்கவும், வாகன ஓட்டுநர்கள் பதட்டம் இல்லாமல் அப்பகுதியை கடந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் அடுத்த பிரதான ரோடான தளி ரோட்டில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது. இந்த ரோட்டில் நுாலகம் அருகே, சந்திப்பு பகுதியிலுள்ள பஸ் ஸ்டாப்பை மாற்றியமைக்க வேண்டும். ரயில்வே மேம்பாலம் பகுதியில், வாகனங்களின் வேகத்தை குறைக்க கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். நகரின் நுழைவாயிலாக உள்ள கொல்லம்பட்டறை பகுதியிலேயே, பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சென்டர்மீடியன் அமைத்தாலும், இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு காரணமாக நெடுஞ்சாலை குறுகலாக உள்ளது. அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நிற்கும் போது பிற வாகனங்கள் விலகிச்செல்ல முடியாது. காலை, மாலை நேரங்களில் அப்பகுதியில், நிரந்தர நெரிசல் உள்ளது. சந்தைக்கும் போக முடியல உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கும் ராஜேந்திரா ரோட்டில், தினசரி சந்தை, கேந்திரியா வித்யாலயா பள்ளி, அண்ணா பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், உழவர் சந்தை என மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் அமைந்துள்ளன. இந்த ரோட்டில், தற்காலிக ஆக்கிரமிப்புகளால் காலை, மாலை நேரங்களில் நிரந்தர நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் நடக்கிறது. சில நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. வ.உசி., கச்சேரி வீதி, வெங்கடகிருஷ்ணா ரோடு உள்ளிட்ட அனைத்து ரோடுகளிலும் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். நகரின் வளர்ச்சிக்கு தடையாக இப்பிரச்னைகள் மாறி வருகின்றன. முன்பு நகர போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த, ரவுண்டானா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வர ஆலோசனைகள் நடத்தப்பட்டு, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. உடுமலை நகராட்சி நிர்வாகம், தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீஸ், வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளையும், தன்னார்வலர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்த வேண்டும். அதில் பெறப்படும் ஆலோசனைகள் அடிப்படையில், திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நகர போக்குவரத்து, நகரா போக்குவரத்தாக மாறி, மக்கள் வேதனை பல மடங்கு அதிகரித்து விடும்.