கவிதை, கட்டுரை போட்டி
திருப்பூர்; தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சு போட்டியில், அரசு கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்று அசத்தினர்.கல்லுாரி மாணவர்களின் பேச்சாற்றல், படைப்பாற்றல் வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட வாரியாக, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி தமிழ் வளர்ச்சித்துறையால் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான போட்டி, திருப்பூர், பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நேற்று நடத்தப்பட்டது. பரிசு பெற்றவர்கள்
கவிதை போட்டி: உடுமலை அரசு கலைக்கல்லுாரி இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் மாரிமுத்து முதலிடம், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி இளம் அறிவியல் விலங்கியல் முதலாம் ஆண்டு மாணவர் நித்திஷ்வரன் இரண்டாமிடம். காங்கயம் பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரியில் இளங்கலை வணிக மேலாண்மை இரண்டாம் ஆண்டு மாணவர் வீரஸ்ரீபதி மூன்றாமிடம்.கட்டுரை போட்டி: உடுமலை அரசு கலைக்கல்லுாரி தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி கவுதமி முதலிடம், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி இளங்கலை மருத்துவம் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் தமிழ் அமுதன் இரண்டாமிடம், குமரன் மகளிர் கல்லுாரி முதுகலை வணிகவியல் கணினி பொறியியல் முதலாம் ஆண்டு மாணவி அமுதா மூன்றாமிடம்.பேச்சு போட்டி: அவிநாசி அரசு கலைக்கல்லுாரி இளம் வணிக நிர்வாகவியல் முதலாம் ஆண்டு மாணவர் தமிழரசன் முதலிடம். தாராபுரம் அரசு கலைக்கல்லுாரி இளம் அறிவியல் வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவர் கவுதமன் இரண்டாமிடம், உடுமலை அரசு கலைக்கல்லுாரி இளம் அறிவியல் இயற்பியல் மூன்றாம் ஆண்டு மாணவர் கவ்ரீஸ் மூன்றாமிடம்.முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பத்தாயிரம், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்கள் முறையே, 7,000 மற்றும், 5,000 ரூபாய் என மொத்தம், 66 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டன. தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ போட்டிகளை ஒருங்கிணைத்தார்.