போலீஸ் டைரி
தொழிலாளி தற்கொலை
செங்கப்பள்ளியை சேர்ந்தவர் செல்வகுமார், 43; தொழிலாளி. கடந்த, 8ம் தேதி வீட்டிலிருந்த இவர், பூச்சி கொல்லி மருந்தை குடித்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர். அரசு பஸ் மோதி விவசாயி பலி
காங்கயம், பெரிய இல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் சேமலையப்பன், 75, விவசாயி. இவர் நேற்று காலை டூவீலரில் காங்கயம் திருப்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியது. படுகாயமடைந்த அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். காங்கயம் போலீசார் விசாரித்தனர். பள்ளி வாகன டிரைவர் மீது தாக்குதல்
ஊத்துக்குளியில் உள்ள தனியார் பள்ளி வாகனம், நேற்று மாலை, பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, காங்கயம் ரோடு விஜயாபுரம் பகுதியில் இறக்கிவிட்டு, திருப்பூர் நோக்கி வந்துள்ளது. அப்போது, பஸ் டிரைவர், முன் சென்ற டூவீலரை 'ஓவர் டேக்' செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, டூவீலர் ஓட்டுனர், பஸ்சை வழிமறித்து, பஸ்சுக்குள் ஏறி பஸ் டிரைவர், பெண் பணியாளரை தாக்கியுள்ளார். டூவீலர் ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் அளித்த புகார் அடிப்படையில் நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.