மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரம்! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
உடுமலை; சாகுபடி பணிகளுக்கு உதவும், 'பவர் டில்லர்' மற்றும் 'பவர் வீடர்' கருவிகள் மானியத்தில் வினியோகிக்கப்படுகிறது; தேவைப்படும் விவசாயிகள் அருகிலுள்ள, வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: தமிழக அரசு, வேளாண் பொறியியல் துறை வாயிலாக வேளாண் இயந்திர மயமாக்குதலுக்கான துணை இயக்க திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.நடப்பு 2024-25ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையின் கீழ், தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில், 4 ஆயிரம் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் (விசை களையெடுக்கும் கருவி), வேளாண்துறையால் வழங்கப்படுகிறது.தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற, அதிகபட்சமாக, ரூ.1.20 லட்சம், பவர் வீடருக்கு, அதிகபட்சமாக 63 ஆயிரம் ரூபாய் அல்லது கருவியின் மொத்த விலையில், 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ, அத்தொகை சிறு, குறு ஆதிதிராவிட, பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில், 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு பங்களிப்பு தொகையை குறைத்து உதவும் வகையில், நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.விவசாயிகள் தங்கள் பங்களிப்பு தொகையை இணையவழி அல்லது வங்கி வரைவோலை வாயிலாக சம்பந்தப்பட்ட நிறுவனம், வினியோகிஸ்தர் அல்லது முகவருக்கோ செலுத்தி, மானிய விலையில் கருவிகளை பெற்றுக்கொள்ளலாம்.கூடுதல் விபரங்களுக்கு, வேளாண் பொறியியல் துறையினர், மாவட்ட செயற்பொறியாளர், வருவாய் கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளர், வட்டார அளவில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.