உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கீரனுார் பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு! வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டம்

கீரனுார் பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு! வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில், கீரனுாரில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் ஊர் மக்கள், வாகனத்தை முற்றுகையிட்டனர். திருப்பூர் மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளில், தினமும், 700 டன்னுக்கும் அதிகமாக குப்பை சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சிக்கென குப்பை கொட்டுவதற்கு பிரத்யேக இடமில்லாத நிலையில், ஆங்காங்கே உள்ள பாறைக்குழியை தேடி பிடித்து, குப்பை கொட்டி நிரப்பி வருகின்றனர். தற்போது, காங்கயம் அருகே கீரனுார் ஊராட்சிக்குட்பட்ட ராசிபாளையம் கிராமத்திலுள்ள பாறைக்குழியில் குப்பை கொட்ட துவங்கினர். இதற்கு ஊர் மக்கள், விவசாய அமைப்பினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து, வாகனத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலர் சதீஷ்குமார், காங்கயம் ஒன்றிய பொறுப்பாளர் சிவசாமி ஆகியோர், அமைச்சர் சாமிநாதன், மாநகராட்சி மேயர் தினேஷ்குமாருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் இல்லாததால், கடந்த மூன்றாண்டாக, பாறைக்குழிகளில் குப்பைகளை கொட்டப்பட்டு நிலத்தடி நீர் மாசுபடுத்தப்பட்டு வருகிறது. நெருப்பெரிச்சல், காளம்பாளையம், பூண்டி - அம்மாபாளையம் ஆகிய இடங்களில் உள்ள பாறைக்குழியில் குப்பைக்கொட்டி வந்த நிலையில், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கீரனுார் - ராசிபாளையம் ஊரில் உள்ள பாறைக்குழியில், குப்பைகளை கொட்ட துவங்கியுள்ளனர். பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளை தேடிப்பிடித்து, விஷத்தன்மை நிறைந்த கழிவு முதற்கொண்டு, அனைத்து கழிவுகளும் கொட்டப்படுவதால், பெரும் சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்புண்டு. விதிப்படி, பயன்பாடற்ற பாறைக்குழிகளை நீர் சேகரிப்பு மையமாகவோ, நீரை தேக்கி வைக்கும் இடமாகவோ அல்லது நிலத்தடி நீரை செறிவூட்ட மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக, நேற்று (நேற்று முன்தினம்) திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் கூட அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்நிலையில், மீண்டும் மீண்டும் பாறைக்குழிகளை தேடிப்பிடித்து குப்பைக் கழிவுகளை கொட்டுவது, சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும். ராசிபாளையம் கிராமம், ஏற்கனவே, ஒரத்துப்பாளையம் அணையில் தேக்கி வைக்கப்பட்ட விஷக்கழிவு நீரால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பாறைக்குழியில் குப்பைக் கொட்டுவதால், கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர். பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளை தேடிப்பிடித்து, விஷத்தன்மை நிறைந்த கழிவு முதற்கொண்டு, அனைத்து கழிவுகளும் கொட்டப்படுவதால், பெரும் சுகதார கேடு ஏற்படும் வாய்ப்புண்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 23, 2025 04:17

வாழ்த்துக்கள் முகிலன் அய்யா , விவசாயிகளுக்கு இருக்கும் தெளிவு அதிகாரிகளுக்கு இல்லையே ? எந்த கோட்டா சிஸ்டத்தில் வந்தவர்கள் அந்த அதிகாரிகள் , இனி அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் கட்டாயம் ஐந்து வருட விவசாய பணியை செய்யவேண்டும் என்று ஒரு சட்டம் வேண்டும் , ஐந்து வருடங்களின் வருமானத்தை அரசிடம் காட்ட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை