சந்தையில் சேவல் விற்பனை அதிகரிப்பு ; பொங்கல் பண்டிகையால் விலை உயர்வு
உடுமலை; உடுமலை சந்தையில், பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் வகையில், கட்டுச்சேவல் விற்பனை அதிகரித்ததோடு, விலையும் உயர்ந்து காணப்பட்டது.உடுமலை சந்தையில், திங்கள் தோறும், காலை ஆடு மற்றும் நாட்டுக்கோழி சந்தை நடந்து வருகிறது.பொங்கல் பண்டிகைக்கு சேவல் சண்டைக்கு தயார் செய்யும் வகையில், நேற்றைய சந்தைக்கு நுாற்றுக்கணக்கான சேவல் மற்றும் நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தன. சேவல்களுக்கு ஏற்ப, 2 ஆயிரம் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டுச்சேவல்கள் விற்பனையானது.அதே போல், நாட்டுக்கோழி மற்றும் ஆடு விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. வியாபாரிகள் கூறியதாவது:கிராமங்களில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது, பெரும்பாலான கிராமங்களில், சேவல் சண்டைகள் நடக்கும். அதற்கு தயாராகும் வகையில், சேவல்களை விலைக்கு வாங்கி, ஒரு மாதம் பயிற்சியளித்து, பயன்படுத்துவார்கள்.அதனால், நேற்றைய சந்தைக்கு, அதிகளவு சேவல்கள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில், பொங்கல் பண்டிகை காரணமாக, சேவல்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.இவ்வாறு, தெரிவித்தனர்.