திருப்பூர்: தென்னம்பாளையத்தில் உள்ள உழவர் சந்தையில், கடந்த நவ. மாதம் 2,172 மெட்ரிக் டன் காய்கறி விற்பனையானது. காய்கறிகளை வாங்கிச் செல்ல, 1.27 லட்சம் வாடிக்கையாளர்களும், விற்பனை செய்ய விவசாயிகள், 7,702 பேரும் வந்தனர். ஒன்பது கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.திருப்பூர் வடக்கு உழவர் சந்தைக்கு 3,117 விவசாயிகள், 784 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை வாங்கிச்செல்ல, 98 ஆயிரத்து 540 வாடிக்கையாளர்கள் வந்தனர்; 3.21 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. இரு உழவர் சந்தைகளிலும் மொத்தம், 12.21 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது. உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், ''கடந்த அக்., மாதம் தீபாவளி, தொடர் விடுமுறை காரணமாக, உழவர் சந்தைகளில் விற்பனை பாதிக்கப்பட்டது. வழக்கமாக, 11 முதல், 12 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும். ஆனால், கடந்த அக்., மாதம், 10.21 கோடி ரூபாய்க்கு மட்டும் விற்பனை நடந்தது. நவ. மாதம் துவக்கத்தில் ஐப்பசி அன்னாபிேஷகம், அதை தொடர்ந்து கார்த்திகை மாதம் துவங்கியதால் விற்பனை அதிகரித்தது. தொடர் மழை காரணமாக, சில தினங்கள் விற்பனை பாதிக்கப்பட்டாலும், விலை குறைவால் தக்காளி வரத்து இருமடங்காக உயர்ந்ததால், வர்த்தகமும் உயர்ந்தது. அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடர்வதால், டிசம்பரில் விற்பனை நன்றாக இருக்குமென நம்புகிறோம்,' என்றனர்.