மேலும் செய்திகள்
மகோகனி மரக்கன்றுகள் இயற்கைக்கு மகோன்னதம்
25-Oct-2024
திருப்பூர்; மூலனுார் அடுத்துள்ள இடைக்காடு பகுதியில், அமராவதி ஆறு சூழ்ந்துள்ள அந்தமான் தீவு எனப்படும் பகுதியில், நேற்று மரக்கன்று நடப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் இலக்குடன் துவங்கிய பசுமை பயணம், வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விவசாயிகள், இத்திட்டத்தில் பயனுள்ள மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புகின்றனர். தினமும் மாவட்ட பகுதிகளில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடக்கிறது.அவ்வகையில், மூலனுார் அருகே நேற்று, மரக்கன்று நட்டு வைக்கப்பட்டது. தாராபுரம் தாலுகா, புஞ்சைதளவாய்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது இடைக்காடு. அப்பகுதியில், அமராவதி ஆறுக்கு இடையே, தீவு போன்ற, ஏறத்தாழ, 400 ஏக்கர் பரப்பு நிலம் உள்ளது. அப்பகுதி மக்கள், அந்தமான் தீவு என்று அழைத்து வருகின்றனர்.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளனர். வேம்பு - 400, தேக்கு - 50, மகோகனி - 50 என, 500 மரக்கன்றுகள் நேற்று நட்டு வைக்கப்பட்டன. சின்னச்சாமி, ஜெகதீஷ் உள்ளிட்டோர், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர். இத்திட்டத்தில் இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க, 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
25-Oct-2024