பயன்படாத நிழற்கூரையால் பள்ளி மாணவர்கள் பாதிப்பு
உடுமலை; ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள நிழற்கூரை, பயன்படுத்த முடியாமல் இருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உடுமலையிலிருந்து திருமூர்த்திமலை செல்லும் வழிதடத்தில், ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 300க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் மட்டுமே மேல்நிலை வகுப்பில், வேளாண் பாடப்பிரிவு இருப்பதால் ஜல்லிபட்டி மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வருகின்றனர். பள்ளியின் முன்புறம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்கூரை முழுவதும் சிதிலமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பள்ளிக்கு அருகில் இருப்பதால், மாணவர்கள் இந்த நிறுத்தத்தை தான் பயன்படுத்துகின்றனர். நிழற்கூரை மிகவும் மோசமடைந்து இருப்பதால் மாணவர்கள் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் அதன் வெளியில் தான் காத்திருக்கின்றனர். மழை நாட்களில் கூட இந்த நிழற்கூரையை பயன்படுத்த முடியாமல், மழைநீரில் நனைந்தபடி நிற்கும் நிலை ஏற்படுகிறது. தேர்வு நாட்களிலும், ஒரு வேளை மட்டுமே பள்ளிக்கு செல்லும் நாட்களிலும் வெயிலில் பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். இந்த அவல நிலையால் பஸ் கூட்டமாக இருப்பினும் மழை நாட்களில் அடுத்த பஸ்சுக்கு காத்திருக்க முடியாமல் நெரிசலுடன் ஏறிச்செல்கின்றனர். மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த பஸ் நிறுத்தத்திற்கான நிழற்கூரையை, சரிசெய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.