எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ்; பிரதமர் மோடி பாராட்டு
திருப்பூர்; புதுடில்லியில் நடந்த 'பாரத் டெக்ஸ்' கண்காட்சியில், எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ் நிறுவனத்தினர் அமைத்த அரங்கை பார்வையிட்ட பிரதமர் மோடி, உயர்தர ஜவுளி உற்பத்திக்கான நவீன திறன்களுக்காக, இந்நிறுவன நிர்வாக இயக்குனர் பரமசிவத்தைப் பாராட்டினார்.புதுடில்லியில் நடந்த 'பாரத் டெக்ஸ்-2025' கண்காட்சியில், நாடு முழுவதும் இருந்து தொழில்துறையினர், அரங்குகளை அமைத்திருந்தனர். கடந்த, 16ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கண்காட்சியை பார்வையிட்டார். ஜவுளி தொழில்நுட்பம், சர்வதேச ஏற்றுமதியில் திருப்பூர் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து கேட்டறிந்தார். ஐந்து முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டும், தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின் ஓர் அங்கமாகத் திகழும், முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான, எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ் நிறுவனம், நவீன காலத்துக்கு ஏற்ற, சொந்த தயாரிப்பு உயர்தர ஆடை ரகங்களை காட்சிப்படுத்தியிருந்தது. அரங்கை பார்வையிட்ட பிரதமரிடம், எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் பரமசிவம், உயர் ஜவுளி ரகங்களை, பெரிய அளவில் உற்பத்தி செய்வதில், தங்கள் நிறுவனத்தின் நவீனத் திறன்களை எடுத்துரைத்தார். இதைக் கேட்டறிந்த பிரதமர், பரமசிவத்தை வெகுவாகப் பாராட்டினார்.