திருப்பூர்: 'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணி, 2023ல் துவங்கியது. இருப்பினும், இந்தாண்டில் கூட, முகப்பு பகுதி, உயரக் கொடிக்கம்பம் உள்ள இடம், இரண்டாவது பிளாட்பார்ம் டிக்கெட் கவுன்டர் மற்றும் பார்க்கிங் பகுதி, முதல் பிளாட்பார்ம் ஓய்வறை, இருபாலருக்கான தனித்தனி கழிவறை, பிளாட்பார்ம் அகலப்படுத்தும் பணி, முன்பதிவு டிக்கெட் கவுன்டர் நவீனத்துவம் உள்ளிட்ட பணிகள் பாதி நிலையிலேயே இந்தாண்டும் முடங்கியுள்ளது. அதேசமயம், முதல் பிளாட்பார்மில் டிக்கெட் கவுன்டர் விரிவுபடுத்தி இடம் மாற்றப்பட்டது. இரண்டாவது பிளாட்பார்மில் புதிய எஸ்கலேட்டர் நிறுவப்பட்டது. பார்க்கிங் பெரும் பிரச்னையாக இருந்த வந்த நிலையில், டூவீலர் ஸ்டாண்ட் மறுசீரமைப்பு செய்து திறக்கப்பட்டுள்ளது. கோவை - ஈரோடு வழித்தடத்தில், திருப்பூர் வழியோர ஸ்டேஷன் என்பதால், புதிய ரயில் இயக்கத்துக்கு வாய்ப்பு இல்லை. கோவையில் இருந்து இயக்கப்படும் புதிய மற்றும் சிறப்பு ரயில்கள் அடுத்த ஸ்டேஷன் திருப்பூர் என்பதால், திருப்பூருக்கும் பயன் தந்து வருகின்றன. நடப்பாண்டில் துவக்கி வைக்கப்பட்ட எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். காற்றில் பறந்த வாக்குறுதி கடந்த, 2024ல் திருப்பூர் வந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்., குமரன் நினைவிடம் துவங்கி, ரயில்வே ஸ்டேஷன் முகப்பு நுழைவு வாயில் வந்து, தலைமை தபால் நிலையம் வந்து பஸ் வெளியேறும் வகையில், ரயில்வே ஸ்டேஷனுக்குள் பஸ்கள் வந்து செல்ல வழி உருவாக்கப்படும், என்றார். இதற்காக, நுாற்றாண்டு கால நுழைவாயில் இடித்து அகற்றப்பட்டு, புதிய நுழைவாயில் கட்டப்பட்டது. ஆனால், புதிய வழித்தடம் அமைக்கவில்லை. பஸ் உள்ளே சென்று திரும்புவதற்கான அமைப்பும் உருவாக்கப்படவில்லை. பொது மேலாளரின் கடந்தாண்டு வாக்குறுதி இந்தாண்டு காற்றுடன் கரைந்திருக்கிறது. பஸ்களுக்காக பயணிகள் ஏக்கம் திருப்பூரில், பண்டிகை காலங்களில், தென் மாவட்டங்களில் இருந்து வரும் சிறப்பு பஸ்களை நிறுத்தி இயக்குவது பெரும் சவாலாக இருந்தது. திருப்பூரில் கோவில்வழி பஸ் ஸ்டாண்ட், 2025 ஆக. மாதம் திறக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது பத்து நாள் சிறப்பு பஸ் இயக்கத்துக்கு போதிய அளவில் இடம் கிடைத்தது. திறந்து நான்கு மாதம் கடந்து ஒரு முன்பதிவு மையம் இங்கு இல்லை. ரிசர்வேஷன் டிக்கெட் பெற, மத்திய பஸ் ஸ்டாண்ட் தான் வர வேண்டியுள்ளது. விரிவான தண்ணீர் வசதி மாநகராட்சியால் ஏற்படுத்தப்படாததால், ஒரு பாட்டில் தண்ணீர், 20 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்டில் போதிய அடிப்படை, உள்கட்டமைப்பு வசதி, அடுத்த ஆண்டிலாவது பூர்த்தியாக வேண்டும். இந்தாண்டு திருப்பூர் மண்டலத்துக்கு, புதிதாக, 80 சிறப்பு பஸ்கள் தருவிக்கப்பட்டன. பழைய பஸ்களுக்கு மாற்றாக இவை வழித்தடத்தில் இயக்கப்பட்டாலும், புதிய வழித்தடங்கள், பயணிகள் எதிர்பார்க்கும் இடங்களில் உருவாக்கப்படவில்லை. இன்னமும் பஸ் இயங்க வேண்டிய வழித்தடம் நிறைய உள்ளன. திருப்பூரில் இருந்து சென்னைக்கு பகல் நேர பஸ் இயக்கம் வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாமல், இரவு நேர இயங்கி வந்த பழைய எஸ்.இ.டி.சி. பஸ் மாற்றப்பட்டு, 'புதிய மல்டி ஆக்சில் வால்வே' பஸ் இரவு புறப்பட்டு மறுநாள் காலை சென்னை சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது. பகல் மற்றும் இரவு என இரண்டு பஸ் கோரிக்கையில், ஒன்று மட்டும் நிறைவேறியுள்ளது. ஆர்.டி.ஓ. அலுவலகம் அமையுமா? திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு, வித்யாலயத்தை அடுத்த சுண்டமேடு பகுதியில், 1.50 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஒப்புதல் கிடைத்தது. கடந்த ஜன. முதல் டிச. வரை எந்த பணியும் நடக்கவில்லை. குறிப்பாக அளவீடு கூட இன்னமும் வருவாய்த்துறையால் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, வட்டார போக்குவரத்து துறையின் ஆவணங்கள், பதிவேடுகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக தொடர்கிறது. வரும் காலத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகம் சிறிய இடமாக இருந்தால் போதுமே என சமதானம் கூறி, கலெக்டர் அலுவலத்தில் ஒரு அறையை ஒதுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மொத்தத்தில் இடம் தேர்வு செய்து ஓராண்டாகியும், தெற்கு ஆர்.டி.ஓ. வுக்கு தனி அலுவலகம் அமையவில்லை. கால்நடைத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில், வாடகைக்கு உள்ளனர். வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., பணியிடம் 11 மாதமாக நிரப்பப்படல்லை. இரு ஆய்வாளர்களுக்குப் பதிலாக ஒரே ஆய்வாளர்தான் உள்ளார். மாவட்டத்தில் வடக்கு, தெற்கு, தாராபுரம் ஆகிய இடங்களில் மூன்று ஆர்.டி.ஓ. அலுவலகம் இருந்தது. உடுமலை ஆய்வாளர் அலுவலகம் தரம் உயர்த்தப்பட்டு, நான்காவது ஆர்.டி.ஓ., அலுவலகமாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தில் ஒன்பது தாலுகா உள்ளது; அவிநாசி, பல்லடம், காங்கயம் ஆகிய இடங்களில், வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது; 2026ல் அறிவிப்பு வருமா?