உள்ளூர் செய்திகள்

சில வரி செய்திகள்

நிர்வாகிகள் பதவியேற்பு

திருப்பூர் வடக்கு ஒன்றிய அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பெருமாநல்லுார் சங்க அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்தில், தலைவராக சண்முகம், துணை தலைவர்களாக செல்வம் மணிகண்டன், கொண்டப்பன், செயலாளராக சரவணன், துணை செயலாளர்களாக முருகேசன், சங்கர், பொருளாளராக கோபால்சாமி, துணை பொருளாளராக பார்த்திபன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டனர். கவுரவ தலைவர் பாலுச்சாமி, கவுரவ ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.

சுடுகாடு சுத்தமாகுமா?

கொடுவாய், கோட்டைமேடு பகுதியில் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடியிருப்பு அருகிலேயே சுடுகாடு உள்ளது. சுடுகாட்டின் பாதி பகுதியை ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகிறது. மீதியுள்ள பகுதியில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதர் மண்டி கிடக்கிறது. அது பாம்புகள் குடியிருக்கும் பகுதியாக மாறி வருகிறது. இறந்தவர்களை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் பெரும் துயரத்தை எதிர்கொள்கின்றனர். எனவே முட்புதர்களை அகற்றி சுடுகாட்டை சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விழிப்புணர்வு வாசகம்

அவிநாசி நகராட்சி பகுதிகளில், மக்கள் அதிகம் கூடும் இடம், பள்ளி, கல்லுாரிகள் முன் ஆகிய இடங்களில், 'புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி' என்ற, வாசகம் ஆங்கிலத்தில் சாலையில் மஞ்ள் வண்ணத்தில் எழுத திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில், அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 30 அடி துாரத்தில், போலீஸ் ஸ்டேஷன் எதிரில் புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என்பதை குறிக்கும் வகையில் மஞ்சள் பெயின்டில் எழுதப்பட்டுள்ளது. இதுபோல், இன்னும் சில இடங்களில் விழிப்புணர்வு வாசகம் எழுதப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கருகும் மரக்கன்றுகள்

பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம் புதுார் - சித்தம்பலம் செல்லும் ரோட்டில், நுாற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. போதிய பராமரிப்புகள் இன்றி, மரக்கன்றுகள் காய்ந்து கருகி வருகின்றன. பல மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள், துளிர்விட்டு கிளைகள் விடாமல், இலைகள் உதிர்ந்து, குச்சிகளாக மட்டுமே நிற்கின்றன. மரக்கன்றுகள் நடுவதுடன் பணிகள் முடிந்தது என்று கருதாமல், அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். எனவே, மீதமுள்ள மரக்கன்றுகளையாவது பராமரித்து பாதுகாக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பசுமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !