விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் கிராமங்களில் சிறப்பு முகாம்
உடுமலை: விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற, வரும், 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும், என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் தகவல்கள் பதிவேற்றம் செய்து, விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தின் கீழ், மின்னணு முறையில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அனைத்து விவசாயிகளுக்கும், ஆதார் எண் போன்று, தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது. வரும் காலங்களில், மத்திய, மாநில அரசுகளின் வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள், தனித்துவ அடையாள எண்ணின் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும், பி.எம்.,கிசான் திட்டத்தில், 21-வது தவணையாக ஊக்கத் தொகை பெற விவசாயிகள், இந்த அடையாள எண் பெறுவது அவசியமாகும். விவசாயிகளுக்கு தனித்துறை அடையாள எண்கள் வழங்கும் முகாம், அனைத்து கிராமங்களிலும் வேளாண் துறை தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட உழவர் நலத்துறை சார்ந்த துறை அலுவலர்களால் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள, ஒரு லட்சத்து, 7 ஆயிரத்து, 892 விவசாயிகளில், இதுவரை 92 ஆயிரத்து, 503 விவசாயிகளுக்கு இம்முகாம்கள் வாயிலாக அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக விவசாயிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை அடையாள எண் பெறாத மற்றும் விடுபட்டுள்ள விவசாயிகள் அனைவரும் தங்களுடைய ஆதார் நகல், நில ஆவணங்களின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட, மொபைல் எண் ஆகியவற்றுடன், அருகிலுள்ள உள்ள பொது சேவை மையம் மற்றும் வேளாண் உழவர் நலத்துறை வாயிலாக கிராமங்களில் முகாம்களில் பங்கேற்று பதிவு செய்ய வேண்டும். வரும், 15ம் தேதிக்குள் விவசாயிகள் பதிவு மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தினை அணுகி, அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து, தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.