திருப்பூர்: தனக்கு அணிவிக்கப்பட்ட சால்வை குறித்து, பிரதமர் கேட்டறிந்து வியப்பை வெளிப்படுத்தியதாக, பா.ஜ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநில இணை அமைப்பாளர் தெரிவித்தார். கோவை, கொடிசியா வளாகத்தில் கடந்த 19ம் தேதி இயற்கை வேளாண் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, கிளாசிக் போலோ நிறுவனம், பட்டு நுாலில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக சால்வை அணிவிக்கப்பட்டது. சால்வையின் மையப்பகுதியில் பாரத மாதா படம், இடது பக்கம் பிரதமரின் உருவ படம், வலது பக்கம் ஏர் பூட்டி உழவு செய்யும் விவசாயி படமும், இருபுறமும் தாமரை மலர்கள் பொறிக்கப்பட்டு, அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதிநவீன நிட்டிங் இயந்திரத்தில் நெசவு செய்யப்பட்ட அந்த சால்வையை, விவசாயிகள் சம்மேளனம் சார்பில், தமிழக பா.ஜ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநில இணை அமைப்பாளர் அத்திக்கடவு சுப்பிரமணியம், பிரதமருக்கு அணிவித்தார். இது குறித்து, கிளாசிக் போலோ நிர்வாக இயக்குனர் சிவராம் கூறுகையில், 'கோவையில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டில், பிரதமரை கவுரவிக்கும் வாய்ப்பு, எங்கள் கிளாசிக் போலோ நிறுவனத்துக்கு கிடைத்தது. இது, ஸ்ரீ ராமபிரானுக்கு, அணில் செய்த சேவைக்கு ஒப்பானது,'' என்றார். பிரதமருக்கு சால்வை அணிவித்த அத்திக்கடவு சுப்பிரமணியம் கூறுகையில், ''இது என் வாழ் நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். அதுவும், சால்வையில் உள்ள அம்சங்களை சொன்னபோது, பிரதமர் வியந்து பாராட்டினார். சிறப்பாக சால்வை தயாரித்து வழங்கி கிளாஸிக் போலோ நிறுவனத்துக்கு நன்றி,'' என்றார்.