மேம்பாலம் கட்டுமானப்பணியில் வேகம்
திருப்பூர்; திருப்பூர், மங்கலம் ரோடு மற்றும் காலேஜ் ரோடுகளை இணைக்கும் வகையில், அணைப் பாளையம் பகுதியில், நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி வேகமெடுத்துள்ளது. திருப்பூரில் நாளுக்கு நாள் வாகன போக்கு வரத்து, நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், நகர சாலைகளில் நெரிசல் மற்றும் விபத்து தவிர்க்க மங்கலம் ரோடு, தாராபுரம் ரோடு, பி.என்.,ரோடு, அவிநாசி ரோடு, காங்கயம் மற்றும் ஊத்துக்குளி ரோடுகளை இணைக்கும் வகையில், ரிங் ரோடு அமைக்கும் பணி கடந்த, 2006ல், துவங்கியது. இதில், மங்கலம் ரோடு மற்றும் காலேஜ் ரோடுகளை இணைக்கும் வகையில், அணைப்பாளையம் பகுதியில், நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டவும், தண்டவாளத்தின் குறுக்கே, ரயில்வே மேம்பாலம் கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டது. கட்டுமானப்பணிக்கு நிலம் கையகப்படுத்த வேண்டிய நிலையில், சிலர் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். கடந்த, 2024 ஆண்டு, பாலம் கட்டுமானப்பணிக்கு நிலம் எடுப்பு தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து, கோர்ட்டில் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும், தள்ளுபடி செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து, திட்டம் வடிமைத்து, 17 ஆண்டுகளாகி விட்ட நிலையில், மறு மதிப்பீடு, கூடுதல் நிதி உள்ளிட்ட நிர்வாக ரீதியான பணிகள் முடிந்து, கடந்தாண்டு, கட்டுமானப்பணி துவங்கியது; கட்டுமானப் பணி வேகமெடுத்து வருகிறது. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பாலம், தற்போது முழுமையடையத் துவங்கியிருக்கிறது. சட்டசபை தேர்தல் அறிவிப்புக்குள் பணியை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.