உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெருநாய் விவகாரம்: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; உச்சநீதிமன்ற உத்தரவு அமலாக்க வேண்டும்

தெருநாய் விவகாரம்: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; உச்சநீதிமன்ற உத்தரவு அமலாக்க வேண்டும்

திருப்பூர்; உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்தக்கோரி, இரண்டு மாவட்ட விவசாயிகள் இணைந்து, திருப்பூரில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடு முழுவதும் தெருநாய்களால் முதியோர், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும் வெளியானதையடுத்து, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவு அளிக்க தடை விதித்தும், வெறிநாய்களை காப்பகத்தில் பராமரிக்கவேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்தும், கோர்ட் உத்தரவை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அமல்படுத்த வலியுறுத்தியும், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாய சங்கங்கள் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி, சுற்றுச்சூழல் பாதகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பல்வேறு சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, தெருநாய்களை காப்பகத்தில் அடைக்க வலியுறுத்திய பேனர் ஏந்தியவாறு, எஸ்.பி., அலுவலக வளாக நுழைவாயில் முதல், கலெக்டர் அலுவலக நுழைவாயில் வரை ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், 'கால்நடைகளை கொல்லும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்; கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்கவேண்டும். தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் முழுமையாக செயல்படுத்தவேண்டும்,' என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பலியான கால்நடைகள்; இழப்பீடு என்னாச்சு?

ஆர்ப்பாட்டத்தில், பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி பேசியதாவது: விவசாயிகளின் தொடர் போராட்டங்களையடுத்து, பலியான கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆடுகளுக்கு ஆறாயிரம் ரூபாயும், கோழிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கிவிட்டு நிறுத்திவிட்டனர். திருப்பூர் மாவட்டத்தில், இதுவரை 1500 ஆடுகள், தெருநாய் கடிக்கு பலியாகியுள்ளன. ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டியநிலையில், விவசாயிகளுக்கு, வெறும் 15 லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு, வீடு தேடிச்சென்று பத்து லட்சம் ரூபாய் வழங்குகின்றனர். கால்நடைகளை இழந்த விவசாயிகளை அரசு திருப்பிப்பார்ப்பதில்லை. தமிழக அரசு, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு, 2024, ஏப். 1 முதல் நிலுவையில் உள்ள இழப்பீட்டு தொகைகளை உடனடியாக வழங்கவேண்டும். தெரு நாய் கடித்து இழந்த கோழிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய்; ஆடுகளுக்கு 25 ஆயிரம்; எருமை மாடு, மாடுகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு தொகை நிர்ணயிக்கவேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு படி, கொடூரமான நாய்களை, அதாவது கால்நடைகளை கடித்து குதறும் நாய்களை, உள்ளாட்சி நிர்வாகங்கள் உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். நாய் கடித்து, ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்போருக்கு, 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தவில்லையெனில், அடுத்தகட்ட போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை