உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலையால் கல்வி செய்த மாணவியர்

கலையால் கல்வி செய்த மாணவியர்

திருப்பூர் : திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நடந்த கலைத்திருவிழாவில், மாணவியர் தங்களின் கலைத்திறமையில், பார்வையாளர்களை பிரமிக்க வைத்தனர்.தமிழக அரசின் உயராய்வு துறை சார்பில், மாநிலம் முழுதும் உள்ள அரசு கலைக்கல்லுாரிகளில் கலைத்திருவிழா நடத்தப்பட்டது. நான்கு நாள் நடந்த கலை விழாவில், மாணவ, மாணவியரின் பல்வேறு திறமைகள் வெளிப்பட்டன. இதில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், 'கலையால் கல்வி செய்வோம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. 30 வகையான தனித்திறன் மற்றும் குழுப் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர், தலைமை வகித்தார். துணை முதல்வர் லிட்டி கொரியா, முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் பங்கேற்றார். மாணவிகளுக்கான தற்காப்பு கலைப்பிரிவில், டேக்வாண்டோ மற்றும் சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவியர், தங்களின் திறமையால் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தனர். டேக்வாண்டோ பிரிவில், 6 பிரிவுகளில், 15 மாணவிகள்; சிலம்ப போட்டியில், 3 பிரிவுகளில், 7 மாணவிகள் பங்கேற்றனர். முதல் மூன்றிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அவர்கள் பல்கலை அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். அதில் வெற்றி பெறுவோர், மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்பர்.நடுவர்களாக பாலகிருஷ்ணன், முரளி, சரவணக்குமார், மாலினி ஆகியோர் செயல்பட்டனர். உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) உஷா, ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ