வெங்காயம் மீதான வரி ரத்து; செல்லமுத்து வரவேற்பு
பல்லடம்; வெங்காயம் மீது விதிக்கப்பட்டிருந்த, 20 சதவீத வரியை மத்திய அரசு ரத்து செய்ததற்கு, உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: வெங்காய ஏற்றுமதி மீதான, 20 சதவீத வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாகவும், ஏப்., 1ம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். தமிழகத்தில், சின்ன வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு சிரமங்களுக்கு இடையில், வெங்காய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, உள்ளூர் சந்தையில் போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், சிறு மற்றும் குறு விவசாயிகள் பலர் மிகுந்த நஷ்டத்தை சந்திக்கின்றனர். மத்திய அரசு, 20 சதவீத ஏற்றுமதி வரியை ரத்து செய்ததால், விவசாயிகள், வெளிநாட்டு சந்தைகளுக்கு வெங்காயத்தை விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம், வெங்காய உற்பத்தியும் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. இதுதவிர, விவசாய விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என்ற வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், விலை கிடைக்கவில்லை என்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.