ஊத்துக்குளி அருகே மில்லில் பயங்கர தீ
ஊத்துக்குளி; ஊத்துக்குளி, கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பக்ருதீன், 43. இவர் அப்பகுதியில் ஓ.இ., மில் நடத்தி வருகிறார். நேற்று காலை மில்லின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. மளமளவென மற்ற பகுதிக்கு தீ பரவி எரிய துவங்கியது. தகவலறிந்து சென்ற ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள், ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். துணிகள், மெஷின்கள் எரிந்ததோடு, மேற் கூரையும் சரிந்து விழுந்து, கட்டடமும் சேதமடைந்தது. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியிருக்கலாம் என்று தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.