உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பேசு பொருள் ஆன குப்பை விவகாரம்

பேசு பொருள் ஆன குப்பை விவகாரம்

திருப்பூர்; மாவட்ட அளவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ஏற்பட்டுள்ள தோல்வி, பேசு பொருளாக மாறியுள்ளது.குப்பை பிரச்னை, மாவட்டம் தழுவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கிராமப்புறங்கள் துவங்கி, நகர்ப்புறங்கள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி வரை, குப்பை பிரச்னை என்பது, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.வீடு, வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து குப்பை சரிவர சேகரிக்கப்பட்டாலும், அவற்றை கொண்டு சேர்க்க இடமில்லாமல், ஊராட்சி நிர்வாகங்களும், மாநகராட்சி நிர்வாகமும் திணறி வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் சேகரிக்கப்படும் குப்பையில், மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரிக்கும் பணி, 10 சதவீதம் அளவுக்கு கூட நடப்பதில்லை.திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட ஊராட்சிப்பகுதிகளில், குப்பைகளை கொட்டுவதற்கு கூட இடமில்லை. மாவட்ட அளவிலான பிரச்னையாக இது எதிரொலிக்க துவங்கியிருக்கிறது. 'திடக்கழிவு மேலாண்மை திட்டம், சரிவர மேற்கொள்ளப்படாததால், அரசுக்கு மக்கள் மத்தியில், அவப்பெயர் ஏற்படுகிறது' என, ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள இந்திய கம்யூ., எம்.பி., சுப்பராயன், முதல்வருக்கு கடிதம் எழுதும் நிலை உருவானது.பல்வேறு அமைப்பினரும், குப்பை பிரச்னை தொடர்பாக பேசத் துவங்கியுள்ளனர். தாங்கள் நடத்தும் கூட்டங்களில் இதுதொடர்பாக விவாதித்து, தீர்மானம் கூட நிறைவேற்றுகின்றனர்.திருப்பூர் மாநகராட்சி சார்பில், காளம்பாளையம், நெருப்பெரிச்சல் உள்ளிட்ட இடங்களில், பாறைக்குழியில் குப்பை கொட்ட, அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேர்தலில் எதிரொலிக்கும் வகையில், குப்பை பிரச்னையை மக்கள் இயக்கமாக மாற்றவும் சில அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

நெருப்பெரிச்சல் பத்திர பதிவு அலுவலகம் அருகில் உள்ள பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. நேற்று முன்தினம் இரவு அப்பகுதியினர் குப்பை லாரியை சிறை பிடித்தனர். இதனால் குப்பை கொட்டுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

நேற்று இரவு இரண்டாம் மண்டல அலுவலகத்தில் மேயர் தினேஷ் குமார், மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அப்பகுதி பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில், மாநகராட்சி தரப்பில் துர்நாற்றம் வராத வகையில் சுகாதாரம் மேற்கொண்டு குப்பை கொட்டுவதாக கூறினர். அதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை