திருப்பூர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் பாப்பாத்தி, 52. ஜன., 7ல் பொள்ளாச்சியில் இருந்து அரசு பஸ்சில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சென்றார்.அவர் அருகே அமர்ந்திருந்த பெண் ஒருவர், மயக்க மருந்து கலந்த லட்டை சாப்பிட கொடுத்து, பாப்பாத்தி அணிந்திருந்த, 2.5 சவரன் நகையை பறித்து தப்பினார்.கண்காணிப்பு கேமராக்களை, போலீசார் ஆய்வு செய்த போது, பஸ்சில் இருந்து இறங்கிய பெண், பின்னால் வந்த டூ - வீலரில் ஏறி தப்பி சென்றதை கண்டனர். இது தொடர்பாக, நாமக்கல், சேந்தமங்கலத்தை சேர்ந்த ராணி, 50, விருதுநகரை சேர்ந்த பரமேஸ்வரன், 50, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்காதல் ஜோடியான இவர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டி வந்தது விசாரணையில் தெரிந்தது. ராணியை மட்டும் பஸ்சில் அனுப்பி விட்டு, பஸ்சின் பின்னால் டூ - வீலரில் பரமேஸ்வரன் வருவது வழக்கம்.ராணி, சக பயணியிடம் பேச்சு கொடுப்பார். 'பேரன் பிறந்த நாள்' எனக்கூறி, மயக்க மருந்து கலந்த லட்டை பயணியிடம் கொடுப்பார். சந்தேகம் வராதிருக்க தானும் ஒரு லட்டை சாப்பிடுவார்.மயக்க மருந்து கலந்த லட்டை சாப்பிட்ட பயணி மயங்கியதும், அவரது நகை உள்ளிட்ட உடைமைகளை ராணி எடுத்துக் கொண்டு, பஸ்சில் இருந்து இறங்கி, பின்னால் டூ - வீலரில் பரமேஸ்வரனுடன் தப்பிவிடுவார்.இவர்கள் இருவரையும் கைது செய்த தாராபுரம் போலீசார், நகை, டூ - வீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.