தேர்த்திருவிழா பொருட்காட்சி அமைப்பதில் சிக்கல் அரசே ஏற்று நடத்த எதிர்பார்ப்பு
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவிற்காக பொழுது போக்கு அம்சங்கள் அமைக்க, 'சிண்டிகேட்' காரணமாக ஏலம் இழுபறியாகி வருகிறது. ஆண்டு தோறும் தொடரும் சிக்கலுக்கு தீர்வாக அரசே ஏற்று நடத்த வேண்டும்.உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆண்டு தோறும் பொருட்காட்சி, பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கப்படுகிறது.சிறுவர்கள், பெரியவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள், திருவிழா கடைகள் என ஆண்டு தோறும் களை கட்டி வருகிறது. ஆண்டுக்கு, 4 கோடி ரூபாய் வரை வணிகம் நடந்து வருகிறது.பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் திருவிழா கடைகள் அமைத்து, கட்டணம் வசூலித்துக்கொள்ள, வருவாய்த்துறை சார்பில் திருவிழாவுக்கு முன் ஏலம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஏலம் எடுப்பவர்களின் 'சிண்டிகேட்' காரணமாக இழுபறியாகிறது.ஏலத்தொகை உயர்ந்துள்ளது, என கூறி, பல முறை ஏலம் ஒத்திவைத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் தொகை குறைக்கப்படுகிறது. அடுத்தாண்டு, போட்டி போட்டுக்கொண்டு, மீண்டும் ஏலத்தொகை உயர்த்தப்படுகிறது.அரசுக்கு செலுத்தும் தொகை பெருமளவு குறைக்கப்பட்டாலும், பொழுது போக்கு அம்சங்களுக்கு, ஒரு நபருக்கு, 150 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.திருவிழா கடைகளுக்கும் கூடுதல் வாடகை வசூலிக்கப்படுவதால், பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் தொடர்ந்து பாதித்து வருகின்றனர். நடப்பாண்டு தேர்த்திருவிழா, துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஏப்., 17ம் தேதியும், பரிவேட்டை, வாணவேடிக்கை, 18ம் தேதியும், 19ம் தேதி, கொடியிறக்கம், மகா அபிேஷகம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.கடந்தாண்டு ஏலத்தொகையுடன், 10 சதவீதம் கூடுதலாக வைத்து, குறைந்த பட்ச ஏலத்தொகையாக, ஒரு கோடியே, 9 லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.ஏல முன் வைப்பு தொகையாக, 27 லட்சத்து, 28 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டு, கடந்த, மார்ச் 17, 24, 28 மற்றும் நேற்று முன்தினம், என நான்கு முறை ஏலம் நடந்தும், 'சிண்டிகேட்' காரணமாக யாரும் ஏலம் கோராமல், ஏலத்தொகையை குறைக்க வலியுறுத்தினர்.இதனால், மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு தேர்த்திருவிழாவில் பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெறுமா, என பொதுமக்களும், குழந்தைகளும் எதிர்பார்த்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும், இதே சிக்கல் நீடித்து வரும் நிலையில், திருவிழா மற்றும் பள்ளி விடுமுறை மாதத்தை கணக்கில் கொண்டு, பொழுது போக்கு பொருட்காட்சியை நடத்த அரசே முன் வர வேண்டும்.கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில், சுற்றுலாத்துறை, மக்கள் தொடர்புத்துறை சார்பில், ஆண்டு தோறும் ஏப்.,- மே மாதங்களில் பொருட்காட்சிகள் நடத்தப்படுகிறது.அதே போல், அதிக வருவாய் உள்ள உடுமலையிலும், பொருட்காட்சி நடத்த அரசு துறைகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொழுது போக்கு அம்சங்களுக்கு, கூடுதல் கட்டணங்கள் நிர்ணயிப்பதால், மக்கள் பாதித்து வரும் நிலையில், அரசுத்துறைகள் நடத்தும் போது, குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு பொழுது போக்கு அம்சங்கள் கிடைப்பதோடு, திருவிழாக்கடைகளுக்கும் குறைந்த வாடகை நிர்ணயிக்கப்படுவதால், பொருட்கள் விலையும் குறையும்.எனவே, மாவட்ட நிர்வாகம் உடுமலையில், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பொருட்காட்சி நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.