| ADDED : ஜன 24, 2024 01:28 AM
திருப்பூர், ஜன. 24-உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட்டுக்கு ஒரே நேரத்தில், புதியவெங்காயம் அதிகமாக வர துவங்கியுள்ளதால், சின்ன வெங்காயம் விலை குறைய துவங்கியுள்ளது.பொங்கலுக்கு முன் சின்ன வெங்காயம் கிலோ, 45 முதல், 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வானிலையில் இயல்பு திரும்பியுள்ளது. பட்டறைகளில் இருப்பு வைத்த வெங்காயத்தை விவசாயிகள் பலர் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.பொங்கல் விடுமுறை முடிந்த பின், சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்த நிலையில், வெளியூர்களில் இருந்து தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கும் வெங்காயம் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. நான்கு முதல், ஐந்து டன் வெங்காயம் வரும் நிலையில், ஒரு வாரமாக ஆறு முதல், எட்டு டன் வெங்காயம் வருகிறது. இதனால், வெங்காயம் விலை தொடர்ந்து குறைய துவங்கியுள்ளது.நேற்று, திருப்பூரின் பல்வேறு பகுதியில் சில்லறை விலையில் சின்ன வெங்காயம், 40 ரூபாய்க்கும், மொத்த விலையில், 2.5 கிலோ, 100 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் விற்கப்பட்டது. இரண்டு மாதங்களாக தொடர்ந்த சின்ன வெங்காயம் விலை, குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.