தொழிலாளருக்கான வசதிகள் அக்கறையுடன் கேட்ட பிரதமர்
திருப்பூர்; திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு செய்துதரப்படும் வசதிகள் குறித்து, 'பாரத் டெக்ஸ்' கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் மோடி அக்கறையுடன் கேட்டறிந்தார்.புதுடில்லியில், 'பாரத் டெக்ஸ்-2025' கண்காட்சி நடந்தது. கண்காட்சியை கடந்த 16ம் தேதி பிரதமர் மோடி பார்வையிட்டார். திருப்பூர், பெங்களூரு போன்ற உற்பத்தி நகரங்களில் இருந்து வந்திருந்த பெண் தொழிலாளர்கள் மற்றும் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து உரையாடினார்.திருப்பூர் எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு மேலாளர் சந்திரிகா அருளுடன் பேசினார். அப்போது, பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கு உண்டான வசதிகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் கேட்டார்.அதற்கு, ''எங்கள் நிறுவனத்தில், 50 சதவீதத்துக்கு மேல் பெண் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். வெளி மாநில தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களது மாநில உணவை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். அவர்களது மொழி தெரிந்த மேலாளர்களை நியமித்துள்ளோம். இதனால், குறைகளை கண்டறிந்து பூர்த்தி செய்வதற்கு எளிதாக உள்ளது. 'போக்சோ' சட்டம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. விடுமுறை நாட்களில் யோகா போன்ற பலவித பொழுதுபோக்கு அம்சங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.எங்கள் நிறுவனம் மட்டுமன்றி, திருப்பூரில் அனைத்து நிறுவனங்களும் இதை பின்பற்றுகின்றன'' என்று கூறினார். பிரதமர் மோடி, நிறுவனம் சிறப்பாக செயல்படுவதாக, வாழ்த்து கூறினார்.