உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனு கொடுத்தால்  பிரச்னை தீரும்: அசையாத நம்பிக்கையில் மக்கள்!

மனு கொடுத்தால்  பிரச்னை தீரும்: அசையாத நம்பிக்கையில் மக்கள்!

திருப்பூர்; கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றால், பிரச்னைகள் தீரும் என்கிற நம்பிக்கையில், மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள், குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்று, 498 மனுக்கள் அளித்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில், நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணரே, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.பஸ் எண்ணிக்கை குறைப்பு------------------------மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையிலானோர் அளித்த மனு:திருப்பூர் மாவட்டத்தில், புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள், குறைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் புது பஸ்ஸ்டாண்டிலிருந்து, மத்திய பஸ் ஸ்டாண்ட் வழியாக, கோவில் வழிக்கு இரவு நேரத்தில் இயக்கப்பட்ட பஸ்கள், நிறுத்தப்பட்டுள்ளன. திருப்பூர் - அவிநாசி ரோட்டிலும், இரவு நேரத்தில் இயக்கப்படும் பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.பனியன் உட்பட பல்வேறு துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், நோயாளிகள் என பல ஆயிரக்கணக்கானோர், அரசு பஸ் சேவையை சார்ந்தே உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில், கிராமப்பகுதிகளுக்கு இயக்கப்பட்ட ஏராளமான பஸ்கள் நிறுத்தப்பட்டன. இயல்புநிலை திருப்பி நான்கு ஆண்டுகளாகியும், நிறுத்தப்பட்ட பஸ்களை, அதே வழித்தடங்களில் மீண்டும் இயக்கவில்லை. மினிபஸ்கள், நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல், கட்டண வசூலுக்காக, விதிமீறி, வேறு வழித்தடங்களில் செல்கின்றன. சில மினி பஸ்களில், அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்து கழகம், மாவட்டம் முழுவதும், அனைத்து வழித்தடங்களிலும் பஸ்களை இயக்க வேண்டும்.ஆன்லைன் பட்டா வேண்டும்------------------------கணக்கம்பாளையம், தியாகி குமரன் காலனியை சேர்ந்த 60 பேர் அளித்த மனு:கணக்கம்பாளையம், தியாகி குமரன் காலனியில், 126 குடும்பங்களுக்கு கடந்த, 1998ல் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதே இடத்தில் வீடுகட்டி குடியிருந்துவருகிறோம். எங்கள் பட்டாவை ஆன்லைனில் பதிவு செய்யாமல் விட்டுள்ளனர். இதனால், நிலம் சார்ந்த எவ்வித செயல்பாடுகளும் மேற்கொள்ள முடிவதில்லை. எங்களுக்கு விரைவாக ஆன்லைன் பட்டா வழங்க வேண்டும்.குப்பை கொட்டக்கூடாது-----------------------அம்மாபாளையம், மா.கம்யூ., கிளை:திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையம், 19வது வார்டு, கணபதி நகர் அருகே உள்ள பாறைக்குழியில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், குப்பை கொட்டி வருகிறது. கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே கடந்த 2021ல், இதே பகுதியில் குப்பை கொட்டியதால், பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதையடுத்து, குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தற்போது, மாநகராட்சி நிர்வாகம், அதே பகுதியில் குப்பை கொட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. எங்கள் பகுதியில் குப்பை கொட்டுவதை நிறுத்த, கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.முன்னறிவிப்பின்றி பணி நீக்கம்---------------------------அவிநாசியை சேர்ந்த மகாபிரபு:அவிநாசி ஒன்றியம், பழங்கரை, ஜெ.ஜெ., நகரில் வசிக்கிறேன். அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்த எனது தந்தை ஐசக், 2009ல் நடந்த விபத்தில், இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில், 2023ல் எனக்கு பணி வழங்கப்பட்டது. கோவை மண்டலம், பல்லடம் டிப்போவில், டிரைவராக பணிபுரிந்து வந்தேன். கடந்த 2024, நவ., மாதம், எவ்வித முன்னறிவிப்புமின்றி என்னை பணிநீக்கம் செய்துவிட்டனர். இதனால், எனது மனைவி மற்றும் ஐந்து பெண் குழந்தைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாரிசு அடிப்படை தற்காலிக டிரைவர் பணியை, நிரந்தரமாக்கி, எனது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.ரோட்டோர காய்கறிக்கடை-----------------------தென்னம்பாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள்:தினசரி மார்க்கெட்டில், அங்கீகரிக்கப்பட்ட இடத்தில், முறையாக வாடகை செலுத்தி, 23 ஆண்டுகளாக, காய்கறி சில்லரை வியாபாரம் செய்துவருகிறோம். திருப்பூர் - பல்லடம் ரோட்டில் இருபுறமும், ஒரு கி.மீ., துாரத்துக்கு, அதிகாலை, 3:00 முதல், அங்கீகாரமின்றி கடை அமைப்பு, காய்கறி வியாபாரம் செய்துவருகின்றனர். காய்கறி மார்க்கெட்டுக்குள் மக்கள் வருகை குறைந்துள்ளதால், எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், குத்தகைதாரர்களுக்கு முறையாக வாடகை செலுத்தமுடிவதில்லை. உழவர் சந்தை விவசாயிகளுக்கும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். ரோட்டோர வியாபாரிகளுக்கு வாடகையோ, சுங்க கட்டணமும் கிடையாது. எனவே, அவற்றை அப்புறப்படுத்தி, தினசரி மார்க்கெட் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.பயன்பாட்டுக்கு வராத தகன மேடை-----------------------------சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை:பல்லடம் நகராட்சியில், பச்சாபாளையம் குட்டை பகுதியில், அமைக்கப்பட்ட தகன மேடை, 3 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. கட்டுமான பணியில், ஊழல் நடந்துள்ளது. பல்லடம் நகராட்சி தலைவரின் கணவர், அறக்கட்டளை துவங்கி, சொந்த செலவில், தகன மேடை கட்டுமான பணிகளை செய்வதாக நகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தகனமேடையை தனியார் அறக்கட்டளையிடம் ஒப்படைத்தால், அதிக கட்டணம் வசூலிக்கப்படும். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள், மொத்தம் 498 மனுக்கள் அளித்தனர்.

நிலுவையிலுள் மனுக்கள்

நேற்றைய நிலவரப்படி, குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்களால் அளிக்கப்பட்ட 2,786 மனுக்கள் தீர்வு காணப்படாமல், நிலுவையில் உள்ளன. இவற்றில், 15 நாட்களுக்கு உட்பட்டவை - 1,121, 30 நாட்களுக்கு உட்பட்டவை - 743, மூன்று மாதத்துக்கு உட்பட்டவை - 868, ஆறு மாதத்துக்கு உட்பட்டவை - 14, ஆறு மாதத்துக்கு மேலானவை - 38, ஓராண்டை கடந்தவை - 2 மனுக்கள் நிலுவையில் உள்ளன. அதேபோல், திருப்பூர் மாவட்டத்திலிருந்து பிரதமருக்கு அனுப்பப்பட்ட மனுக்களில், 72 மனுக்கள் நிலுவையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை