மேலும் செய்திகள்
காமாட்சியம்மன் திருக்கல்யாணம்
18-May-2025
திருப்பூர், ; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேர்த்திருவிழா நேற்று துவங்கியது.வேதமந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் கூடிய கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நந்தியம் பெருமான், சூரியன் - சந்திரன், மணி, துாபக்கால் படங்களுடன் கொடி தயாரிக்கப்பட்டிருந்தது. சிவாச்சாரியார்கள், கொடியை எடுத்தபடி கோவிலை சுற்றி வந்து, அறங்காவலர் குழுவினர், கோவில் அலுவலர்களுடன் இணைந்து கொடியேற்றி, பூஜைகள் நடந்தது. ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், கருட சின்னத்துடன் கொடி உருவாக்கப்பட்டிருந்தது. பட்டாச்சார்யார்கள், கோவிலை வலம் வந்து, கொடியை கொடிமரத்தில் ஏற்றினர். தொடர்ந்து, கொடிமரத்துக்கு, துாபம் மற்றும் தீபம் காண்பித்து பூஜை செய்தனர்.முன்னதாக, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், விநாயகர், சூலதேவர், விசாலாட்சியம்மன் மற்றும் சோமாஸ்கந்தருக்கு, மகா அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. கொடியேற்றத்துக்கு பின், ஸ்ரீசோமாஸ்கந்தர் கற்பக விருட்ஷ வாகனத்திலும், விசாலாட்சியம்மன் சிம்ம வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும் திருவீதியுலா சென்று அருள்பாலித்தனர்.கிராம சாந்தி பூஜைகள் துவங்கும் முன்னதாக, திருப்பூர் மக்களின் காவல் தெய்வமாக கொண்டாடப்படும் செல்லாண்டியம்மனிடம் முன் அனுமதி பெறப்பட்டது. சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய செல்லாண்டியம்மன், நான்கு ரத வீதிகளில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார்; அதனை தொடர்ந்து, நள்ளிரவு நேரத்தில், கிராமசாந்தி பூஜைகள் நடந்தன.
18-May-2025