உலகப் புத்தொழில் மாநாடு புதுமை நிரூபிக்கும் மேடை
திருப்பூர்:கோவை கொடிசியா வளாகத்தில், 9, 10 ஆகிய தேதிகளில் 'தமிழ்நாடு உலகப் புத்தொழில் மாநாடு - 2025' நடக்கிறது. தமிழக அரசின், 'ஸ்டார் அப்' நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள், நிறுவனங்கள் ஆகியோரை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் முயற்சியாக, இந்த மாநாடு அமைய உள்ளது. 'ஸ்டார்ட் அப் இந்தியா' வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறியதாவது: நம் நாட்டில், 1.50 லட்சத்துக்கும் அதிமான 'ஸ்டார்ட் அப்'கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும், 9,800 'ஸ்டார்ட் அப்'களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியாவின் முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் முன்னேறியுள்ளதாக, ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. தமிழகம், இந்தியாவின் புதுமை மற்றும் தொழில் முனைவின் மையமாக மாறியுள்ளது. 'ஸ்டார்ட் அப்' இந்தியா உருவாக்கிய அடித்தளமே, 'ஸ்டார்ட் அப்' தமிழ்நாடு என, தமிழகத்தில் வேரூன்றியுள்ளது. ஒவ்வொரு கல்லுாரி மாணவரும், தொழில் முனைவோரும், நாமும், ஒரு 'ஸ்டார்ட் அப்' ஆரம்பிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் முன்னேறுகின்றனர். கோவையில் நடப்பது வெறும் மாநாடு மட்டுமல்ல. இது தமிழகம், தனது புதுமை சக்தியை உலகளவில் நிரூபிக்கும் மேடையாக இருக்கும். 'ஸ்டார்ட் அப் இந்தியா' புரட்சியில், தமிழகம் அடுத்த தலைமுறையை வழிநடத்தும் முக்கிய மாநிலமாக உயர்ந்துள்ளது.