பல்லடம் 3 பேர் கொலை வழக்கில் இதுவரை துப்பு துலங்கவில்லை; தனிப்படைகளில் கூடுதலாக போலீசார் நியமித்து விசாரணை வேகம்
திருப்பூர் ; பல்லடம் அருகே மூவர் படுகொலை வழக்கில், ஒன்றரை மாதமாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. டி.ஐ.ஜி., - எஸ்.பி., ஆகியோர் மாற்றப்பட்ட நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த பொங்கலுார் - சேமலைக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 78. இவரது மனைவி அலமேலு, 75, மகன் செந்தில்குமார், 46 ஆகியோருடன் இவரை, கடந்த நவ., 29ம் தேதி ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்தது. ஒன்றரை மாதமாகியும், இதில் தொடர்புடையவர்களை நெருங்க முடியாமல் போலீசார் திக்குமுக்காடி வருகின்றனர்.வீட்டில் இருந்த கைப்பற்றப்பட்ட, ஐந்து ரேகைகளை போலீசார் கைப்பற்றி, தடய அறிவியல் பிரிவினர் சோதனை செய்தனர். அதில், முன்னேற்றம் ஏதுமில்லை. மாயமான செந்தில்குமாரின் மொபைல் போன், இதுவரை 'ஆன்' செய்யப்படாமல் உள்ளது. நான்கு மதுபாட்டில்கள், சிகரெட் துண்டுகள் என, இதுபோன்ற ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயங்களையும் சேகரித்து விசாரித்தும் பயனளிக்கவில்லை. 7,500 ஜிபி., 'புட்டேஜ்'
வழக்கில் ஏதாவது ஒரு தடயம் கிடைக்கும் என்ற நோக்கத்தில், 284 இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட, 265 'சிசிடிவி' கேமரா பதிவுகளை தற்போது வரை பார்த்து வருகின்றனர். மொத்தம், 7,500 ஜி.பி., டேட்டா என்பதால், உடனே பார்க்க முடியவில்லை. இதனை பார்க்க மட்டும் ஒரு தனிப்படை சுழற்சி முறையில் பார்த்து வருகின்றனர். அதில், எதையும் தவற விட்டு கூடாது என்று கண்ணும் கருத்துமாக கையாண்டு வருகின்றனர்.வீடியோக்களை பொறுமையாக பார்த்து வருவதால், இன்னமும் இப்பணி முடியவில்லை. அன்று இரவு பதிவான மொபைல் போன் சிக்னல்கள் குறித்த விபரம் பெறப்பட்டு விசாரணை நடக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில், அந்த சுற்று வட்டாரத்தில் பதிவான சிக்னல் நம்பர்களை சேகரித்து, விசாரிக்கின்றனர்.தனிப்படையினர், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளனர். அண்டை மாநிலங்களை சேர்ந்த குற்ற தொடர்புடையவர்கள் இதில் ஈடுபட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. 'டேட்டா' அதிகம்...
பல்லடம் மூன்று பேர் கொலை வழக்கு குறித்து, பல கோணங்களில் விசாரணை நடக்கிறது. 'சிசிடிவி' கேமரா பார்ப்பது போன்ற பல பணிகளில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட டேட்டா அதிகம் என்பதால், பார்க்க தாமதம் ஏற்படுகிறது. அதேபோல், விசாரணையை துரிதப்படுத்தும் வகையில், 14 தனிப்படையில் தற்போது கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.- சசிமோகன் கோவை சரக டி.ஐ.ஜி., விரைவில் பிடிபடுவர்...
மூன்று பேர் கொலை வழக்கில் தற்போது வரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. தனிப்படையினர் தொடர்ந்து இயங்கி வருகின்றனர். 'சிசிடிவி' கேமரா மீது கவனம் செலுத்தி பார்த்து வருகிறோம். கண்டிப்பாக கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம். - கிரீஷ் அசோக் யாதவ்திருப்பூர் மாவட்ட எஸ்.பி., --------------------------------------எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள் - 423)கொலை நடந்த நாளில் இருந்து தற்போது வரை, அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், அவர்களது தோட்டத்தில் வேலை செய்தவர்கள், பழைய தொழிலாளர்கள், அவர்களுடன் கருத்து வேறுபாட்டில் இருந்தவர்கள் என, ஒவ்வொரு பட்டியலாக எடுக்கப்பட்டு, நுாறு பேரிடம் விசாரித்தனர். அதிலும், பெரிய முன்னேற்றமில்லை
விசாரணைக்கு முட்டுக்கட்டை?
போலீசார் சிலர் கூறியதாவது:பல்லடம் கொடூர கொலை தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடத்தி இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் ஆரம்ப கட்ட நிலையிலே உள்ளது. மொபைல் போன் டவர் சிக்னல், 'சிசிடிவி' கேமரா, தடய அறிவியல் போன்ற அறிவியல் பூர்வமாக பார்த்து வருகின்றனர். இவ்வழக்கை முழு நேரமாக கண்காணித்து விசாரித்த வந்த டி.ஐ.ஜி., - எஸ்.பி., ஆகியோரும் மாற்றப்பட்டு, தற்போது வந்துள்ள புதிய அதிகாரிகள் ஆரம்ப கட்டத்தில் இருந்து தற்போது வரை என்னென்ன விசாரணை நடந்தது, ஏதாவது 'மிஸ்' ஆகியுள்ளதா என, விசாரிக்கின்றனர். இதுபோன்ற கொலை, முக்கியமான வழக்குகளை விசாரிக்க திறமையான, அனுபவம் வாய்ந்த போலீசார் இருந்தனர். தற்போது அதுபோன்ற போலீசார் இல்லை. போலீசார் பற்றாக்குறை உள்ளது. சந்தேகப்படும் நபர்கள் சிலரிடம் விசாரிக்க போலீசார் முற்படும் போது, சில அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், விசாரிக்க இடையூறு செய்கின்றனர். கொலையாளிகளை கண்டறிய சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளவும், வேறு பணிகளில் ஈடுபடுத்தாமல், இதில் மட்டும் கவனம் செலுத்த உயரதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.