| ADDED : ஜன 21, 2024 01:03 AM
மார்கழி மாதம், 'தேவர் மாதம்' எனப்படுகிறது. அதாவது, கடவுளை வழிபடும் மாதமாகும். ஆன்மிகம் சார்ந்த முயற்சிகள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே, ஆன்மிக சொற்பொழிவாளர்களின், ஆண்டாண்டு கால தொடர் ஆலோசனையாக இருந்து வருகிறது.அந்த வரிசையில், அவிநாசி வீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில் ஒரு மாதம் நடத்தப்பட்ட நிகழ்வில் வில்லி பாரத சொற்பொழிவை நிகழ்த்தி முடித்திருக்கிறார், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன். அவரிடம் பேசினோம்...அயோத்தி ராமர் கோவில் திறப்பு குறித்து...!அயோத்தியில் ராமர் பிறந்தார். அவருக்கு கோவில் கிடைத்துவிட்டது மகிழ்ச்சி.பக்தி அதிகரித்திருக்கிறதா, குறைந்திருக்கிறதா?அதிகரிக்கவே செய்திருக்கிறது. ஆன்மிகத்தை யாராலும் அழிக்க முடியாது. கவலை வரும் போது, ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கித் தான் ஆக வேண்டும். இக்கால கட்டத்தில், இளைஞர்கள் மத்தியில் கூட ஆன்மிக தேடல் அதிகரித்திருக்கிறது. காரணம், அவர்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகம். தங்களது சுமையை இறைவன் இறக்கி வைக்க மாட்டானா என்ற, ஏக்கம் இருக்கிறது; அது, பக்தியாக வெளிப்படுகிறது. யாரும், தாங்கள் விருப்பப்பட்ட எந்த கடவுளையும் வணங்க உரிமையுண்டு; அதில் எந்த ஏற்றத்தாழ்வும் பார்க்க கூடாது.சமீபகாலமாக கோவில் கும்பாபிேஷகம் அதிகளவில் நடக்கிறதே?கோவில்களில், 12 ஆண்டு இடைவெளியில் கும்பாபிேஷகம் நடத்தப்படுகிறது; கிராமப்புறங்களில் உள்ள கோவில்கள், பஜனை மடங்கள் கூட புதுப்பொலிவு பெறுகின்றன; அதற்கு காரணம், கிராமப்புற இளைஞர்கள், வெளிநாடு சென்று பணி செய்து, தங்கள் சொந்த ஊரில் உள்ள கோவில்களின் வளர்ச்சிக்கு நன்கொடை வழங்குகின்றனர்; உதவுகின்றனர்.ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு, வரவேற்பு அதிகரித்திருக்கிறதா?உலகளவில் அதிகரித்திருக்கிறது; யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக கூட, அதிகம் பேர் ஆன்மிக சொற்பொழிவுகளை பார்க்கின்றனர், கேட்கின்றனர்.