உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மக்களே.... படகு சவாரிக்கு தயாரா? ஆண்டிபாளையம் குளத்தில், 26ம் தேதி துவக்கம்

திருப்பூர் மக்களே.... படகு சவாரிக்கு தயாரா? ஆண்டிபாளையம் குளத்தில், 26ம் தேதி துவக்கம்

உள்ளூர் மக்களின் பொழுதுபோக்க, திருப்பூர் மாவட்ட சுற்றுலா துறை பரிந்துரைப்படி, ஆண்டிப்பாளையம் குளத்தை, சுற்றுலா தலமாக மாற்றியிருக்கிறது, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம். திருப்பூர் - மங்கலம் ரோட்டில், 58 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிபாளையம் குளம் அமைந்திருக்கிறது.மங்கலம் நல்லம்மன் தடுப்பணையிலிருந்தும், ஒட்டணையிலிருந்தும் குளத்துக்கு தண்ணீர் வருகிறது. ஆண்டு முழுதும் தண்ணீர் தேங்கி, ரம்மியமாக காட்சியளிக்கிறது; குளத்தின் நடுவே உள்ள திடல்களில் அடர்ந்து வளர்ந்துள்ள மரம், செடி, கொடிகளில் பல்வேறு வகை பறவைகளும் வந்து செல்கின்றன.நகரையொட்டி இயற்கையாய் அமைந்துவிட்ட இக்குளம், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த போதும், சுற்றுலா மேம்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கியது. விளைவாக, ஆண்டிபாளையம் குளத்தில் படகு இல்லம் உருவாக்க, 1.50 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது அரசு. படகு இல்லத்தின் முகப்பில் பூங்கா, டிக்கெட் கவுன்டர், அதையொட்டி, சிறுவர்கள் விளையாட உபகரணங்களுடன் கூடிய திடல் ஆகிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.குடிநீர், கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. படகு இல்ல அலுவலகத்தின் மேல் தளத்தில் திறந்தவெளி உணவகமும் அமைக்கப்பட உள்ளது. 'அங்கு அமர்ந்து குளத்தை ரசிப்பது, ரம்மியமான சூழலையும், மனதிற்கு புத்துணர்ச்சியை தரும் என்ற நோக்கில், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்கின்றனர், சுற்றுலா துறையினர்.வரும், 26ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், இந்த படகு இல்லத்தை 'வீடியோ கான்பிரன்ஸிங்' மூலமாக திறந்து வைக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 'எட்டு பேர் அமர்ந்து சவாரி செய்யக் கூடிய, 2 மோட்டார் படகு, 3 துடுப்பு படகு, 8 பெடல் படகு என, 13 படகுகள் தயார் நிலையில் உள்ளன. படகு சவாரிக்கான கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படகு இல்ல மேலாளர், கார்டனர், கிளீனர் உள்ளிட்ட அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.'பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில், வெளிமாவட்டம், பிற மாநில தொழிலாளர் ஏராளமானோர் வசிக்கின்றனர்.இரவு பகல் பாராமல் உழைக்கும் தொழிலாளர்களுக்கு, திருப்பூரில் போதிய பொழுதுபோக்கு, சுற்றுலா அம்சங்கள் இல்லை என்கிற குறையை இந்த படகு இல்லம் நிவர்த்தி செய்யும்' என்கின்றனர், சுற்றுலா துறையினர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை