நெடுஞ்சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல்.. இனியாவது மாறுமா? மடத்துக்குளத்தில் கட்டமைப்பு இல்லாமல் சிக்கல்
உடுமலை; தாலுகாவாக தரம் உயர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், மடத்துக்குளம் பகுதியில், போக்குவரத்து கட்டமைப்புகள் எதுவும் மேம்படுத்தப்படவில்லை; இதனால், வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதுடன், போக்குவரத்து நெரிசலால் அப்பகுதியில் பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளது. கோவை - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. அருகிலுள்ள மாவட்ட எல்லையில், பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது; விவசாயமும் இப்பகுதியில், பிரதானமாக உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் இதர கட்டமைப்புகள் மேம்பாட்டுக்காக, கடந்த, 2009ல், மடத்துக்குளத்தை தலைமையிடமாகக்கொண்டு, தாலுகாவை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. தாலுகாவாக தரம் உயர்ந்து, 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், அடிப்படை போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் கூட மடத்துக்குளத்தில் மேம்படுத்தப்படவில்லை. அங்குள்ள பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு பகுதியில், நிலவும் போக்குவரத்து நெரிசலே அப்பகுதியில் நிலவும் பிரச்னைக்கு உதாரணமாக உள்ளது. இந்த சந்திப்பில், தேசிய நெடுஞ்சாலையுடன், கணியூர் மற்றும் குமரலிங்கம் ரோடு சந்திக்கும் நான்கு ரோடு சந்திப்பு உள்ளது. இணைப்பு ரோடுகளில் இருந்து வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையில் இணையவும், எதிர்பகுதிக்கு செல்லவும் மிகுந்த சிரமம் நிலவுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக வரும் போது, இணைப்பு ரோட்டில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. தொடர் பாதிப்பு காலை, மாலை நேரங்களில், நெடுஞ்சாலை வாகன போக்குவரத்து முற்றிலுமாக தேங்கி ஸ்தம்பிக்கிறது. அப்போது, மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வரும் பஸ்களும் நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன. இதனால், பெரும்பாலான பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல், நெடுஞ்சாலையிலேயே நின்று, மக்களை ஏற்றிச்செல்கின்றன. நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, நான்கு ரோடு சந்திப்பில், போக்குவரத்து கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ரவுண்டானா அவசியம் குறைந்தபட்சமாக அப்பகுதியில், ரவுண்டானா அமைத்தால் கூட சந்திப்பில் வாகனங்கள் வேகத்தை குறைத்து கடந்து செல்ல முடியும்; விபத்துகளும் தவிர்க்கப்படும். இதே போல், அமராவதி ஆற்றுப்பாலம் முதல் நான்கு ரோடு சந்திப்பு வரை ஆக்கிரமிப்பு மற்றும் குறுகலான பகுதியாக இருப்பதால், போக்குவரத்து பாதிப்பது தொடர்கதையாக உள்ளது. தொழிற்சாலைகளுக்கு வரும் கனரக வாகனங்கள் மாற்று வழியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் எவ்வித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், அவ்விடத்தில், சந்திப்பு விரிவாக்க பணி மேற்கொள்ளலாம். மேலும், மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட், சந்திப்பு பகுதியில், நெரிசலை குறைக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து, பேரூராட்சி, தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை உள்ளடக்கிய துறைகளை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். அதில், போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதே போல், மடத்துக்குளம் தாலுகாவில் குமரலிங்கம், காரத்தொழுவு, கணியூர், துங்காவி உள்ளிட்ட பகுதிகளிலும், சந்திப்பு பகுதிகளை மேம்படுத்த சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இது குறித்து, மடத்துக்குளத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதே நிலை நீடித்தால், தாலுகாவாக தரம் உயர்ந்தும், மடத்துக்குளம் வளர்ச்சியில் பின்தங்கியே இருக்கும். சிக்னல் மட்டுமாவது! மடத்துக்குளம் சந்திப்பு பகுதியில் நீண்ட கால பிரச்னைக்கு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த தாமதம் ஏற்படலாம். அதுவரை, சந்திப்பில், தானியங்கி சிக்னல் மட்டுமாவது அமைக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், நெடுஞ்சாலை மற்றும் இதர வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிப்பது மட்டுமாவது தவிர்க்கப்படும்.