உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மையத்தடுப்பிலும் மரக்கன்று வளர்ப்பு : சாலைகளில் சாத்தியமான யோசனை

மையத்தடுப்பிலும் மரக்கன்று வளர்ப்பு : சாலைகளில் சாத்தியமான யோசனை

மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், 80 கோடி ரூபாய் செலவில், அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப்பணி தற்போது நடந்து வருகிறது; இதற்கென, சாலையோரம் அடர்ந்து வளர்ந்திருந்த, ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. இந்த பசுமை இழப்பை ஈடு செய்ய, மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர், நெடுஞ்சாலைத்துறையினர். சாலையோரம் மட்டுமின்றி, சாலையின் நடுவில் அமைக்கப்பட்ட மையத்தடுப்பிலும் குறிப்பிட்ட இடைவெளியில் மரக்கன்றுகள் நடப்படுவது தான், கூடுதல் சிறப்பு. நடப்படும் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து, வளர்த்தெடுக்கும் பொறுப்பை ஏற்கும் நெடுஞ்சாலைத்துறையினர், தங்கள் பசுமை மீட்டெடுக்கும் பணியில் தன்னார்வ அமைப்பினரையும் இணைத்துக் கொள்வது, அவர்களுக்கு எளிதாக இருக்கும். 'சாலை விரிவாக்கத்தின் போது, மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்க, சாலையின் மையப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்' என்ற யோசனையை, கடந்த ஓராண்டாக முன்னெடுத்து வருகின்றனர், அவிநாசி 'களம்' அறக்கட்டளையினர். அந்த யோசனையை ஏற்று, மாவட்ட நிர்வாகம், மாநில நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறைகளின் அனுமதியுடன், பல்வேறு பொதுநல அமைப்பினரின் ஆதரவுடன் வெள்ளோட்ட முயற்சியாக, அவிநாசி - சேவூர் சாலையில், சிந்தாமணி தியேட்டர் பகுதி, அவிநாசி - அன்னுார் சாலையில், கருவலுாரிலும் மையத்தடுப்பில் மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர். தற்போது நடப்பட்ட மரக்கன்றுகள் தழைத்து வளர்ந்து வருகின்றன. வெயில் காலங்களில், லாரி உதவியுடன் மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சி, அம்மரக்கன்றுகள் உயிர்ப்புடன் இருப்பதற்கான ஏற்பாடுகளையும் 'களம்' அமைப்பினர் செய்து வருகின்றனர். மரங்கள் நன்கு வளர்ந்து கிளை பரப்பும் போது, சாலை முழுக்க அவை நிழல் பரப்பும்.

சுட்டிக்காட்டிய 'தினமலர்

' திருப்பூர் தொழில் நகரமாக இருப்பினும், பசுமை போர்வையை அதிகப்படுத்த, மரக்கன்று நடுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் மேம்படுத்தும் பணிகளை 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அவ்வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் வாயிலாக, மாவட்டம் முழுவதும், இதுவரை, 24 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பசுமை பணியை, பட்டிதொட்டி எங்கும் 'தினமலர்' கொண்டு சேர்த்துள்ளது. அதன் விளைவாக, மரம் வளர்க்க வேண்டுமென்ற 'விதை'யை அனைவரின் எண்ணங்களிலும் 'தினமலர்' விதைத்தது. அதன் தொடர்ச்சியாக, 'சாலையின் மையத்தடுப்பில் மரக்கன்று நட்டு வளர்க்க, நெடுஞ்சாலைத்துறை ஊக்குவிக்க வேண்டும்; கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டும்' என்பதையும், 'தினமலர்' தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலைத்துறையினரின் இம்முயற்சிக்கு, களம் அறக்கட்டளையினர், பாராட்டு தெரிவித்துள்ளனர். அதே நேரம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பை, மரக்கன்று வளர்ப்பில் ஆர்வம் காட்டம் தன்னார்வ அமைப்பினரிடம் வழங்கினால், நெடுஞ்சாலைத்துறையினரின் பணிச்சுமை வெகுவாக குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை