மேலும் செய்திகள்
அரசு பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்
21-Jan-2025
அவிநாசி; திருப்பூர் அருகே 'அதிவேக' தனியார் பஸ் கவிழ்ந்ததில், படிக்கட்டில் பயணித்த, கல்லுாரி மாணவர்கள் இருவர் இறந்தனர். மாணவ, மாணவியர் உள்பட இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 'சக்தி டிரான்ஸ்போர்ட்ஸ்' (டிஎன்.34.டி.4050) என்ற தனியார் பஸ், நேற்று காலை 7:55 மணிக்கு ஈரோடு புறப்பட்டது. பஸ்சில் 90க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். படிக்கட்டில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் தொங்கிக்கொண்டு வந்தனர்.காலை 8:30 மணியளவில், செங்கப்பள்ளி அடுத்த பல்லகவுண்டம்பாளையம் அருகே சாம்ராஜ்பாளையம் பிரிவு, சர்வீஸ் சாலையில், சரக்கு லாரியை பஸ் முந்த முயன்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் திடீரென கவிழ்ந்தது. இதில், ஈரோடு நந்தா கல்லுாரியில் பி.காம்., படித்துவந்த சுண்டக்காம்பாளையம் ஊமச்சி வலசு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஹரிகிருஷ்ணா, 19, பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவந்த தில்லைக்குட்டைப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன் பெரியசாமி, 19, ஆகியோர் அதே இடத்தில் பலியாயினர். மாணவ, மாணவியர் குருராஜ், 19, கீதா, 18, தரணிஷ், 15, சுபித், 19 ஆகிய நான்கு பேரும், படுகாயம் அடைந்த நிலையில் பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அருகிலுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், திருப்பூர் டி.ஆர்.ஓ., மோகனசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில், மீட்புப்பணியை முடுக்கினர். பஸ்சில் பயணித்த திருப்பூர் - போயம்பாளையத்தை சேர்ந்த நரேந்திரன், 24, என்பவர் கூறுகையில், ''இரு படிக்கட்டுகளிலும் கல்லுாரி மாணவர்கள் நின்றபடியே பயணம் செய்தனர். பல்லகவுண்டம் பாளையம் பிரிவு அருகே லாரியை டிரைவர் முந்த முயற்சித்தபோது, பஸ் அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கி ஏறி கவிழ்ந்தது. என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள் ஒருவர் மீது ஒருவர் மேலே விழுந்தனர். விபத்தில் நான்கைந்து பேருக்கு கை,கால்கள் துண்டானதுடன், பலத்த காயம் ஏற்பட்டது. எனக்கு வலது தோள்பட்டை, இடுப்பில் காயம் ஏற்பட்டது'' என்றார். விபத்து ஏன்?
''விபத்து நடந்த தனியார் பஸ் வழக்கமாக திருப்பூரில் இருந்து 7:50க்கு புறப்படும். இந்த பஸ்சுக்கு முன் புறப்பட வேண்டிய தனியார் பஸ் பழுதானதால், அதில் ஏற வேண்டிய பயணிகளும் பஸ்சில் பயணித்தனர். இதனால் பஸ் 7:50க்கு பதிலாக ஐந்து நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது. விரைவாக செல்ல வேண்டும் என்ற நோக்கில், பஸ்சை அதிவேகத்தில் டிரைவர் இயக்கியுள்ளார். பஸ்சில் பயணிகளும் அதிகளவில் இருந்தனர். அதிவேகமும், அதிக பயணிகள் இருந்ததும் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது'' என்கின்றனர்.எஸ்.பி., கூறுகையில், ''விபத்து நடந்த பஸ் டிரைவர் பெருந்துறையை சேர்ந்த மாரசாமி, 57, நடத்துனர் துரைசாமி, 48 ஆகியோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். நிதியுதவி
விபத்தில் பலியான மாணவர்கள் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
21-Jan-2025