உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆர்.சி.பி., வெற்றி கொண்டாட்டத்தை பார்க்க சென்ற உடுமலை பெண் பலி சொந்த ஊரில் மக்கள் அஞ்சலி

ஆர்.சி.பி., வெற்றி கொண்டாட்டத்தை பார்க்க சென்ற உடுமலை பெண் பலி சொந்த ஊரில் மக்கள் அஞ்சலி

உடுமலை:பெங்களூரு ஆர்.சி.பி., அணி வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற, உடுமலையைச் சேர்ந்த ஐ.டி., பெண் ஊழியர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி கோப்பையை பெங்களூரு, ஆர்.சி.பி., அணி முதல் முறையாக வென்றது. இதன் வெற்றி கொண்டாட்டம், கர்நாடக மாநிலம், பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பல லட்சம் பேர் திரண்ட நிலையில், திடீரென ஏற்பட்ட நெரிசல் காரணமாக, பலர் உயிரிழந்தனர்.இதில், திருப்பூர் மாவட்டம், உடுமலை, மைவாடி பிரிவு விவேகானந்தா பள்ளி தாளாளர் மூர்த்தி - ராஜலட்சுமி தம்பதியின் ஒரே மகள் காமாட்சி தேவி, 27, பலியானார்.பெங்களூரில் உள்ள அமேசான் ஐ.டி., நிறுவனத்தில், இரு ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்த காமாட்சி தேவி, பாஸ் பெற்று, ஸ்டேடியத்தில் கீழ் வரிசையில் அமர்ந்து இருந்தார்.ஏராளமானவர்கள் திரண்டதால், நெரிசல் ஏற்பட்டு, 50க்கும் மேற்பட்டோர் விழுந்தனர். இதில், கீழே அமர்ந்திருந்த காமாட்சி தேவி மீது பலர் விழுந்து அழுத்தியதால், மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.பெங்களூரு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, காமாட்சி தேவியின் உடல், உடுமலை மைவாடியிலுள்ள பள்ளிக்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அவரது தந்தை மூர்த்தி, ஆன்மிகம், நன்னெறி பேச்சாளராகவும், சமூக சேவகராகவும் உள்ளதால், காமாட்சி தேவி உடலுக்கு ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர். மாலை, உடுமலை எரிவாயு மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramaraj P
ஜூன் 06, 2025 09:33

இப்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்திருந்தால் ஊடகங்களுக்கு கொண்டாட்டமாக இருந்து இருக்கும். ஆனால் காங்கிரஸ் ஆட்சி என்ன செய்வது.