உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி பாசன நீர் திருட்டு தடுக்க முடியாமல்... அதிகாரிகள் திணறல்!நடைமுறைக்கு வராத கலெக்டரின் உத்தரவு

அமராவதி பாசன நீர் திருட்டு தடுக்க முடியாமல்... அதிகாரிகள் திணறல்!நடைமுறைக்கு வராத கலெக்டரின் உத்தரவு

உடுமலை;திருப்பூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்தும், அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திருட்டை தடுக்க முடியாத சூழல் உள்ளது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.ஆறு மற்றும் கால்வாய்களில், 50 மீட்டர் துாரத்திற்குள், கிணறு, போர்வெல்கள் அமைக்கக்கூடாது, அவற்றுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது, என்ற நிபந்தனை உள்ளது.ஆனால், அமராவதி ஆற்றில் நேரடியாக மின் மோட்டார்கள் அமைத்து, விவசாயம் மட்டுமின்றி, வணிக நோக்கத்திற்காக, தொழிற்சாலைகளுக்கும் அதிகளவு நீர் உறிஞ்சப்படுகிறது.கல்லாபுரத்தில் துவங்கி, தாராபுரம், கரூர் வரை, நுாற்றுக்கணக்கான மின் மோட்டார்கள் ஆற்றில் நேரடியாக அமைத்து நீர் திருடப்படுகிறது.அதிலும், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளுக்கு அதிகளவு தண்ணீர் திருடப்படுகிறது. இதனால், ஆற்றில் திறக்கப்படும் நீரில், விநாடிக்கு, 300 கனஅடி வரை மாயமாகி வருகிறது.அதேபோல், பிரதான கால்வாயில், சாமராயபட்டி, கொமரலிங்கம், பாப்பான்குளம் என வழியோரத்தில் விவசாய பயன்பாட்டிற்கும், மைவாடி, கருப்புசாமிபுதுார், நரசிங்காபுரம் பகுதியில், கல்குவாரி, கிரசர் தொழிற்சாலைகளுக்கு சட்ட விரோதமாக தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்படுகிறது.பெரும்பாலான எம் - சாண்ட் உற்பத்தி தொழிற்சாலைகளில், எம் - சாண்ட் கழுவி, சுத்தம் செய்வதற்கு பிரதான கால்வாய் நீர் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, பிரதான கால்வாயில், விநாடிக்கு, 50 முதல், 100 கன அடி வரை நீர் முறைகேடாக எடுக்கப்படுகிறது.இதனால், விவசாயிகளுக்கு முழுமையாக நீர் கிடைக்காமலும், கடை மடைக்கு நீர் கொண்டு சேர்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஜன., 25 முதல், மார்ச் 15 வரை, ஆறு மற்றும் பிரதான கால்வாயில், பாசன பகுதிகளிலுள்ள நிலைப்பயிர்களை காக்கும் வகையில், நீர் திறக்கப்பட்டுள்ளது.ஆறு, கால்வாயில் நீர் பெருமளவு திருடப்படுவதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர். கடை மடைக்கு நீர் சென்று சேராமல், பாசன பகுதிகளிலுள்ள தென்னை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து வருகிறது.அமராவதி பாசன பகுதியில் நடக்கும் நீர் திருட்டைத்தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர், நீர் வளத்துறை, மின் வாரியம், வருவாய்த்துறை மற்றும் போலீசார் கொண்ட, கூட்டு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.ஆனால், அரசு துறை அதிகாரிகளைக்கொண்ட குழு, பகுதி வாரியாக அமைக்கப்படவில்லை. தவறு நடக்கும் இடத்துக்கு நீர் வளத்துறை அதிகாரிகள் சென்றாலும், மிரட்டப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது.இதனால், நீர் திருட்டை தடுக்க முடியாமல், நீர் வளத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.எனவே, அரசுத்துறை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கவும், நீர் திருட்டை தடுக்க திருப்பூர் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ,என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு கி.மீ.,க்கும் ஒரு குழு!

நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வறட்சி காணப்படுவதோடு, கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆறு மற்றும் பிரதான கால்வாயில், நுாற்றுக்கணக்கான இடங்களில், நேரடியாக மின் மோட்டார் அமைத்து நீர் திருடப்படுகிறது.ஆற்றுப்பகுதியில், ஏராளமான மோட்டார்களை வைத்து, பல கி.மீ., துாரத்திற்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் அதிகளவு திருடப்படுகிறது. திருட்டை தடுக்க ஆய்வுக்கு செல்லும் நீர் வளத்துறை அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். எனவே, நீர் திருட்டைத்தடுக்க, ஒவ்வொரு கி.மீ.,க்கும், அரசுத்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்க வேண்டும்.நீர் திருட்டு கண்டறியப்பட்டால், உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை