உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கீகாரமற்ற வீட்டுமனை வரன்முறை 2026 ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

அங்கீகாரமற்ற வீட்டுமனை வரன்முறை 2026 ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

திருப்பூர், : நகர்ப்புறம் மற்றும் நகர்ப்புறத்தையொட்டி அமைந்த கிராமங்களில், வீட்டுமனை பிரிவுகள் புற்றீசல் போல் முளைத்தன. கடந்த, 20 ஆண்டுகளாக, புதிய குடியிருப்பு பகுதிகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. வீட்டுமனை பிரிவை உருவாக்கி, விற்பனை செய்வோரில், பெரும்பாலானவர்கள், 'ரிசர்வ் சைட்' உள்ளிட்ட விதிகளை சரிவர பின்பற்றவில்லை.மனைகளுக்கான இணைப்பு ரோடுகள் அளவும் குறைவாக இருந்தது. 'ரிசர்வ்' இடம் விடாத காரணத்தால், அப்பகுதியில் வீடு கட்டி குடியேறும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு, நகர் ஊரமைப்புத்துறையில் முறையான அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில், 2016 அக்., 20 ம் தேதி வரை, பத்திரப்பதிவு செய்த அங்கீகாரமற்ற மனைகளை, வரன்முறை செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. அதன்படி, 2016 அக்., 20ம் தேதிக்கு முன் மனை பிரிக்கப்பட்டு, ஒரு மனையாவது விற்பனை செய்யப்பட்டிருந்தால், அவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி, மனை உரிமையாளர்களோ, மனை பிரித்தவர்களோ வரன்முறை செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கான, மனைப்பிரிவு அங்கீகார கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. கடந்த, 2016ம் ஆண்டு முதல், எட்டு முறை, 2024 பிப்., 29 ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது. அதற்கு பிறகும், பல்வேறு பகுதிகளில், ஏழை, எளிய மக்களின் மனைகள் அங்கீகாரம் பெறாமல் இருப்பதாக கோரிக்கை எழுந்தது.அதன்படி, தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மீண்டும் அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, 2016 அக்., 20 ம் தேதிக்கு முன் கிரயம் செய்யப்பட்ட வீட்டுமனைகள், அங்கீகாரம் பெறப்படாமல் இருந்தால், அவற்றை, நகர ஊரமைப்புத்துறை இணையதளம் வாயிலாக, 2026 ஜூன் 30ம் தேதி பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி, வாய்ப்பில்லை

திருப்பூர் நகர் ஊரமைப்புத்துறை அலுவலர்கள் கூறுகையில்,' தமிழக அரசு, ஒன்பதாவது முறையாக, மீண்டும் அங்கீகாரமற்ற மனைகளை வரன்முறை செய்ய, அவகாசம் வழங்கியுள்ளது. 2016 அக்., 20ம் தேதிக்கு முன்பாக வாங்கி, கிரயம் செய்த மனைதாரர்கள்; ஒரு மனையாவது விற்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட மனைப்பிரிவு உரிமையாளரும், சம்பந்தப்பட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து, உரிய கட்டணங்களை செலுத்தி, ஒவ்வொரு மனையையும் வரன்முறை செய்து கொள்ளலாம். இதற்கு பின், மீண்டும் அவகாச நீட்டிப்பு செய்ய வாய்ப்பில்லை; எனவே, விடுபட்டவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை