உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  துார்வாரப்படாத நீர் வரத்து கால்வாய்கள் குளங்களுக்கு பாதிப்பு

 துார்வாரப்படாத நீர் வரத்து கால்வாய்கள் குளங்களுக்கு பாதிப்பு

உடுமலை: ஏழு குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய்கள், பராமரிக்கப்படாமல், புதர் மண்டி கிடப்பதால், விரயம் ஏற்படுவதுடன், தண்ணீரும் மாசடைகிறது. உடுமலை ஏழு குள பாசனத்திட்டத்தின் கீழுள்ள குளங்கள் வாயிலாக, நேரடியாக, 2,643 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுற்றுப்பகுதி கிராமங்களிலுள்ள, பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் நிலத்தடி நீராதாரமாக இக்குளங்கள் உள்ளன. ஏழு குள பாசன திட்ட குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து அரசாணை அடிப்படையில், தளி கால்வாயில், தண்ணீர் திறக்கப்படுகிறது. ஒவ்வொரு சீசனிலும், அடுக்குத்தொடராக அமைந்துள்ள குளங்கள், ஒவ்வொன்றாக நிரப்புவது வழக்கம். இவ்வாறு, ஒரு குளத்தில் இருந்து மற்றொரு குளத்துக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள், போதிய பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளன. கான்கிரீட் கரை அமைக்கப்படாத பகுதிகளில், கால்வாயின் நிலை படுமோசமாக உள்ளது. உடுமலை நகரை ஒட்டி அமைந்துள்ள ஒட்டுக்குளத்துக்கு, தண்ணீர் வரும் கால்வாய் புதர் மண்டி காணப்படுகிறது. போடிபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளின் குடியிருப்பை ஒட்டி, இக்கால்வாய் அமைந்துள்ளது. சில இடங்களில், கால்வாய் கரை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது; பல இடங்களில், அனைத்து வகை கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால், குளத்துக்கு வரும் தண்ணீர் மாசடைந்து, கால்நடைகளும், மீன் வளர்ப்பும் பாதிக்கிறது. அணையிலிருந்து தண்ணீர் திறப்புக்கு முன், கால்வாய்களை துார்வாராததால், விரயம் அதிகரித்துள்ளது; பராமரிப்பில்லாத கால்வாய், நீர் திருட்டுக்கும், சாதகமாக மாறியுள்ளது. குளங்கள் முழுமையாக நிரம்பாவிட்டால், பாசனத்துக்கு பற்றாக்குறை ஏற்படும்; நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படும். எனவே, தண்ணீர் திறப்புக்கு முன்னதாகவே, குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை, துார்வார வேண்டும் என விவசாயிகள் பல முறை வலியுறுத்தினர். ஆனால், பொதுப்பணித்துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகள் கூறியதாவது: ஏழு குளங்களுக்கு தண்ணீர் வரும் அனைத்து கால்வாய்களையும் மேம்படுத்த வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். இதனால், நீர் நிர்வாகத்தில், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. நீர் விரயத்தை தவிர்க்கும் வகையில், அனைத்து கால்வாய்களையும் மேம்படுத்த பொதுப்பணித்துறை சார்பில், அரசுக்கு கருத்துரு அனுப்பி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை