டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
உடுமலை: உடுமலையில், டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, அனுஷம் நகரில் டாஸ்மாக் மதுக்கடை (எண் 2009) அமைந்துள்ளது. வணிக நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகளுக்கு மத்தியிலும், இதன் அருகில் சுந்தர விநாயகர் கோவில் மற்றும் தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. சுற்றுப்புற கிராமங்களிலுள்ள கோவில்களுக்கு, இக்கிணற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து செல்வதோடு, பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, கம்பம் இங்கிருந்து, சிறப்பு பூஜைகள் செய்து கம்பம் எடுத்துச்செல்வதோடு, திருவிழா முடிந்ததும், தீர்த்த கிணற்றிலேயே கம்பம் விடப்படுகிறது. மேலும், சுந்தர விநாயகர் கோவில் நுாற்றாண்டுகளாக, பொது மடமாகவும் செயல்படுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்களும், தை, பங்குனி மாதங்களில், பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இங்கு, ஓய்வு எடுத்துச்செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். சிறப்பு வாய்ந்த தீர்த்த கிணற்றுக்கு, மிக அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையுடன், மது அருந்தும் 'பார்' அமைந்துள்ளதால், காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் டம்ளர்கள், வீணாகும் உணவு பொருட்கள் இந்த தீர்த்தக்கிணற்றில் வீசப்படுகிறது. மேலும், மது அருந்துபவர்கள், திறந்த வெளியில் உள்ள இக்கிணற்றை, திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். பஸ் ஸ்டாண்டிற்கு அருகில்,பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும், என பல ஆண்டுகளாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம், மாரியம்மன் கோவில் நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கவுன்சிலர் அரசகாளை மற்றும் பொதுமக்கள் தொடர்ந்த வழக்கில், மாவட்ட கலெக்டர் டாஸ்மாக் மதுக்கடையை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, உடனடியாக டாஸ்மாக் மதுக்கடையை மாற்ற வேண்டும், என மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, உடுமலை தாலுகா உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில், தாலுகா அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நகரச்செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் செல்வராஜ், தலைவர் ஈஸ்வரன், நகரத்தலைவர் சுந்தரராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.