நவநீத கிருஷ்ண பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்
உடுமலை, ; உடுமலை நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவத்துடன் துவங்கியது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, வரும், 10ம் தேதி நடக்கிறது.உடுமலை, பெரியகடை வீதி, பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், வைகுண்டஏகாதசி, திருவாய்மொழி திருவாசல், பரமபத வாசல் திறப்பு உற்சவ விழாவில், பகல் பத்து உற்சவம், திருநெடுந்தாண்டவம், 'மின்னுருவாய்' பாசுரத்துடன் துவங்கியது.பகல் பத்து உற்சவத்தில் முதல் நாளான, நேற்றுமுன்தினம் மாலை, 4:00 மணிக்கு, திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி பாசுரங்கள் சேவையுடன், எம்பெருமாள் ஸ்ரீ மச்சவதார அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தினமும், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை, பாசுரங்கள் சேவையும், நம்பெருமாள், கூர்ம அவதாரம், வராஹ அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ஸ்ரீ ராம அவதாரம், பலராமர், கிருஷ்ணர் என பல்வேறு அவதாரங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.வரும் 9ம் தேதி, மோகினி அலங்காரம், ஸ்ரீ நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு, 10ம் தேதி, அதிகாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து, இராப்பத்து திருவாழ்மொழி உற்சவம் துவங்கி, 20ம் தேதி வரை நடக்கிறது.