உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காய்கறி பயிரில் வைரஸ் தாக்குதல்; தொடர் நஷ்டத்தில் விவசாயிகள்

காய்கறி பயிரில் வைரஸ் தாக்குதல்; தொடர் நஷ்டத்தில் விவசாயிகள்

திருப்பூர்; ''காய்கறி பயிர்களில் வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த, விஞ்ஞானிகள் மூலம், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவேண்டும்'' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் மதுசூதனன், கலெக்டர் மனிஷ் நாரணவரேயிடம் அளித்துள்ள மனு: திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக, சின்னவெங்காயம், மிளகாய், கத்தரி, தக்காளி, வெண்டை, புடலை, அவரை, பீர்க்கன், சுரைக்காய் மற்றும் கீரை வகைகள் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. காய்கறி பயிர் சாகுபடிக்கு, வீரிய ஒட்டு ரக விதைகளையே விவசாயிகள் பயன்படுத்திவருகின்றனர். விதைகளை பயன்படுத்தியோ அல்லது நாற்றுப்பண்ணைகளிலிருந்து, நாற்றுகள் வாங்கி நடவு செய்கின்றனர். காய்கறி பயிர்களில் கடும் வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டு, போதிய உற்பத்தியின்றி விவசாயிகள் தொடர் நஷ்டத்தை சந்தித்துவருகின்றனர். இந்த வைரஸ் நோய் விதைகளில் இருந்து வருவதாக தெரியவருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மருந்து இல்லாததால், பாதிப்பு அதிகரிக்கிறது. விதைகளின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய முடியாத நிலையே நீடிக்கிறது. முளைப்புத்திறன் உள்ளதா என்றுமட்டும் அரசு துறையினர் ஆய்வு செய்கின்றனர். வேளாண் அதிகாரிகள், உரியவகையில் ஆய்வு மேற்கொண்டு, காய்கறி பயிர்களில் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும்; விஞ்ஞானிகள் மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளார். அடியோடு காயும் தென்னைகள் வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய்களால், தென்னை மரங்கள் அடியோடு காய்கின்றன. தென்னை வளர்ச்சி வாரியம் மூலம், தென்னைக்கு பயிர் காப்பீடு வழங்கவேண்டும். வரும் ஆகஸ்ட் மாதம், மாவட்டத்தில் பரவலாக மக்காச்சோளம் பயிரிடப்படும். தரமான வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைகள் கிடைக்கவும், படைப்புழுக்களை கட்டுப்படுத்தவும் விவசாயிகளுக்கு உதவவேண்டும். - மதுசூதனன், மாவட்ட தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை