உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நொய்யல் குளங்களில் நீர் பொங்கல் விழா! நதியை மீட்டெடுக்க யோசனை

நொய்யல் குளங்களில் நீர் பொங்கல் விழா! நதியை மீட்டெடுக்க யோசனை

'நீரின்றி அமையாது உலகு; நீரோடும் நொய்யலே நமது இலக்கு...' இப்படியான அறைகூவலுடன் தான், திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் அமைப்பினர் இணைந்து, நொய்யல் நதிக்கரையில் பொங்கல் விழா நடத்தினர்.இரு நாள் நடந்த விழாவில், பாரம்பரியம், பண்பாடு போற்றும் கலை, கலாசார நிகழ்ச்சிகள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என உள்ளூர் மக்களை கவர்ந்தது. 'நீரோடும் நொய்யல் என்ற இலக்கை எட்டுவது சாத்தியமா?'சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம் கூறியதாவது:நொய்யல் நதிக்கரையில் பொங்கல் விழா நடத்துவது, வரவேற் புக்குரியது. தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரத்தை மக்கள் உணர்ந்துக் கொள்ள முடியும்; அறிந்துக் கொள்ள முடியும். அதே நேரம், நொய்யலை பாதுகாப்பது, மீட்டெடுப்பது எப்படி என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.தற்போது, நொய்யல் நதியை காப்பாற்ற வேண்டும் என எண்ணம், பலதரப்பு மக்கள் மத்தியிலும் ஏற்பட்டிருப்பது, பாராட்டுக்குரியது. நொய்யல் கரையையொட்டி கான்கிரீட் தடுப்பு, தார் ரோடு ஆகியவை அமைப்பதன் வாயிலாக, அது, சாக்கடையாக, கால்வாயாக மாறுகிறது.மாறாக, நொய்யல் நதிக்கரையை, மண் திட்டு நிறைந்த கரையாகவே விட வேண்டும். அங்கு பெருங்கோரை புற்கள், எருவை உள்ளிட்ட தாவரங்கள் வளரும். இந்த தாவரங்கள், நீர்நிலைகளில் உள்ள நஞ்சை உறிஞ்சி, நீரை சுத்திகரிக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட நீரில் பறவை, பூச்சியினங்கள் உள்ளிட்ட நன்னீர் உயிர்கள் உருவாகும்.நதி என்பது உயிர்ச்சூழல்; அது, எதுவுமற்ற சாக்கடையாக ஓடிக்கொண்டிருக்கிறது.சாக்கடையில் இருந்துக் கொண்டு, நதியை பற்றி பேசுகிறோம் என்பதே யதார்த்தம். கோவையில் துவங்கி, திருப்பூர், ஈரோடு வரை செல்லும், 179 கி.மீ., துார நதியில், கழிவுகள் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழிற்சாலைகள், தங்கள் கழிவுகளை சுத்திகரித்த பின்பு தான், நதியில் விட வேண்டும். மழைநீரோடு சேர்த்து, சாயக்கழிவுநீரையும் கலக்க செய்யும் செயலில், இன்னும் கூட சிலர் ஈடுபடுகின்றனர்.கோவை, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகங்கள், கழிவுநீரை சுத்திகரித்த பின்பே, நொய்யலில் கலக்க விட வேண்டும். நாகரிகம் தோன்றிய நொய்யல் நதிக்கரையில், பொங்கல் வைப்பது பொருத்தமானது. நொய்யலில், 32 குளங்கள் உள்ளன.அந்ததந்த பகுதியில் உள்ள மக்கள், அங்கு நீர் பொங்கல் வைக்கலாம். அப்போது, நதியை மீட்டெடுக்கும் விழிப்புணர்வு வரும்.இதுபோன்ற விழாக்களில் வெறும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்றல்லாமல், நொய்யல் நதியின், 2,500 ஆண்டுகால பழமை, பாரம்பரியத்தை உணர்த்தும் கண்காட்சிகள் வைக்கலாம்; நொய்யல் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் நடத்தலாம்; பயிலரங்கம் நடத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ