பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசன நிலங்களுக்கு இன்று நீர் திறப்பு! இரு மாவட்டங்களில் 94,362 ஏக்கர் பயன்பெறும்
உடுமலை: பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு, திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்கப்படுகிறது. இதன் வாயிலாக, கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94 ஆயிரத்து, 362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள், நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுகிறது.இரண்டாம் மண்டல பாசன நிலங்களுக்கு, கடந்தாண்டு, ஆக., 18 முதல், கடந்த, ஜன., 4 வரை, 5 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு, நிறைவு செய்யப்பட்டது.தொடர்ந்து, காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக, நீர் கொண்டு வந்து திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்திய நிலையில், இன்று முதல், வரும் ஜூன் 13 வரை, 135 நாட்களில், உரிய இடைவெளிவிட்டு, ஐந்து சுற்றுக்களில், 10 ஆயிரத்து, 300 கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில், இன்று காலை, திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாய் வழியாக, மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது.இதன் வாயிலாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவிலுள்ள, 19 ஆயிரத்து, 781 ஏக்கர் நிலங்களும், சூலுார் தாலுகா, 3,020 ஏக்கர் என, 22 ஆயிரத்து, 801 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.அதே போல், திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகாவிலுள்ள, 13 ஆயிரத்து, 428 ஏக்கர், மடத்துக்குளம் தாலுகா, 6,763 ஏக்கர், தாராபுரம் தாலுகா, 18 ஆயிரத்து, 963 ஏக்கர், பல்லடம் தாலுகா, 17 ஆயிரத்து, 465 ஏக்கர், திருப்பூர் தாலுகா, 7,266, காங்கயம் தாலுகா, 7,676 ஏக்கர் என மொத்தம், இரு மாவட்டங்களிலுள்ள, 94 ஆயிரத்து, 362 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். நீர் இருப்பு நிலவரம்
நேற்று காலை நிலவரப்படி, திருமூர்த்தி அணையில் மொத்தமுள்ள, 60 அடியில், 50.79 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,550.17 அடி நீர்இருப்பு இருந்தது.அணைக்கு வினாடிக்கு, காண்டூர் கால்வாய் வழியாக, 821 கனஅடி நீரும், பாலாறு வழியாக, 14 கனஅடி நீர் என மொத்தம், 835 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, குடிநீர், இழப்பு என, 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.திட்ட தொகுப்பு அணைகளில், நேற்று காலை நிலவரப்படி, மொத்தம், 16 ஆயிரத்து, 78 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.