| ADDED : ஜன 26, 2024 01:07 AM
திருப்பூர்;காங்கயம், நத்தக்கடையூர் பழையகோட்டை கிராமத்தில், நெல் அறு வடைக்கு பின் பயறு வகை சாகுபடி செய்வது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.அதில், திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பேசியதாவது: காங்கயம் பகுதியில் தற்போது, சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், அறுவடைக்கு வரவுள்ளது. அறுவடை முடிந்த பின், பூமி தரிசாக வைப்பதற்கு பதில், பயறு வகை பயிர்களை சாகுபடி செய்வதால், கூடுதல் மகசூல் பெற முடியும். நெல் தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய, 'வம்பன் 8, 10' போன்ற மஞ்சள் நோய் தாக்காத புதிய உளுந்து ரகங்களை பயிரிடலாம்.இவை, 70 நாளில் கூடுதல் மகசூல் கொடுக்கும். நெல் தரிசு பூமியில் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்யும் போது, காற்றில் தழைச்சத்தை கிரகித்து, பூமியில் நிலை நிறுத்துவதால், மண் வளம் மேம்படுகிறது. உயிர் உரங்கள் மற்றும் பயறு நுண்ணுாட்டங்களை இடுவதன் வாயிலாக மகசூல் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.முகாமில், வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி, வேளாண்மை அலுவலர் சந்தியா, துணை வேளாண்மை அலுவலர் ரமேஷ், உதவி வேளாண்மை அலுவலர் ஜோதீஸ்வரன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.