பயன்பாட்டுக்கு விடுவது என்னாச்சு?
அவிநாசி: மக்கள் வரிப்பணம், 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வராமல் பாழாகி வருகிறது. அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்த கட்டடம் முழுமையாக அகற்றப்பட்டு, ஏறத்தாழ, 6 கோடி ரூபாய் மதிப்பில், வணிக வளாகம் கட்டப்பட்டது. இதனை, 2024 டிச. 19ல் துணை முதல்வர் உதயநிதி, காணொலி காட்சியாக திறந்து வைத்தார். ஆனால், வணிக வளாக கட்டடம் இன்று வரை பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், நகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி கவுன்சிலர்கள் கூறியதாவது: தற்போது வரை வணிகவளாக கட்டடத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்யாமல் உள்ளது. கட்டுமான பணிக்காக டென்டரில் அறிவிக்கப்பட்டிருந்த தொகைக்கு மேல் கூடுதலாக செலவு ஆனதாக, ஒப்பந்ததாரர் கூறி வருகிறார். இதனாலேயே பொதுப்பணித்துறையினரும், நகராட்சி நிர்வாகத்தினரும் வணிக வளாக கட்டடத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து ஏலம் விடுவதில் அலட்சியமாக இருக்கின்றனர். இந்நிலையில் வணிக வளாக கட்டடத்தின் நுழைவுப் பகுதியில், தரைப்பகுதி இடிந்து கற்கள் பெயர்ந்து உள்ளது. மாடிக்கு செல்லும் கிரானைட் படிக்கட்டுகள் சேதம் அடையும் நிலையில் உள்ளது. கட்டடத்தின் முன் பகுதியில் உள்ள மழை நீர் சேமிப்பு சோக் பிட் பகுதி இடிந்து உள்ளது. வணிக வளாக கட்டடம் பொது பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே இடிந்து சேதமாகி வருவது, வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். பொதுமக்கள் கூறுகையில், 'மக்களின் வரிப்பணத்தில் அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும் அதனை நடைமுறைப்படுத்தி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்திட அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளும் அலுவலர்களும் பணியாற்ற வேண்டும். அவ்வகையில் ஆறு கோடி ரூபாய், செலவில் கட்டப்பட்ட வணிக வளாகக் கட்டடம் கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனடியாக கடை களுக்கான வாடகை நிர்ணயம் செய்து வணிக வளாக கட்டடத்தை ஏலம் நடத்தி முறையான வியாபாரி களுக்கு வழங்க வேண்டும்,' என்றனர்.